மன்னர் 3ஆம் சார்ள்ஸை மரபணு பரிசோதனைக்கு உட்படக் கோரி வழக்குத் தொடுக்கப்போவதாகவும் அந்நபர் கூறுகிறார்.
சைமன் டொரன்ட் டே எனும் இந்நபர் 56 வயதானவர். இவர் ஒரு பொறியியலாளர் ஆவார்.
இளவரசர் சார்ள்ஸுக்கும் அவரின் மனைவியான கமீலாவுக்கும் பிறந்த இரகசிய பிள்ளை தான் என சைமன் டொரான்ட் டே நீண்ட காலமாக கூறி வருகிறார்.
மன்னர் 3 ஆம் சார்ள்ஸ், கமீலா
1966 ஏப்ரல் 5 ஆம் திகதி பிரிட்டனின் போர்ட்ஸ்மௌத் நகரில் பிறந்தவர் சைமன் டொரன்ட் டே. 8 மாத குழந்தையாக இருக்கும்போது, கரண் டே, டேவிட் டே எனும் பிரித்தானிய குடும்பமொன்றினால் தத்தெடுக்கப்பட்டதாகவும் அக்குடும்பம் பின்னர் அவுஸ்திரேலியாவில் குடியேறியதாகவும் டொரன்ட் டே கூறுகிறார்.
தற்போது குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சைமன் டொரன்ட் டே வசித்து வருகிறார்.
சார்ள்ஸ், கமீலா தம்பதியின் இரகசிய குழந்தை தான் என தனது வளர்ப்புப் பாட்டி தன்னிடம் தெரிவித்தார் என டொரன்ட் டே கூறுகிறார்.
சைமன் டொரன்ட் டே
1965 ஆம் ஆண்டில் சார்ள்ஸும் கமீலாவும் நெருக்கமானவர்களாக இருந்தனர் எனவும், தான் பிறப்பதற்கு முன்னர் பிரித்தானிய சமூக வலயங்களிலிருந்து கமீலா 9 மாதங்கள் காணாமல் போயிருந்தார். சார்ள்ஸ் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார் என டொரன்ட் டே கூறுகிறார்.
அரசி 2 ஆம் எலிஸபெத், மன்னர் 3 ஆம் சார்ள்ஸ், கமீலா, இளவரசர் வில்லியம் ஆகியோரின் இளமைக்கால புகைப்படங்களைளுடன் தனதும் தனது குழந்தைகளின் புகைப்படங்களுக்கும் இடையிலான உருவ ஒற்றுமைகளையும் அவர் வலியுறுத்தி வருகிறார்.
தான் சார்ள்ஸின் வாரிசு என நிரூபிப்பதற்காக சார்ள்ஸ், கமீலா ஆகியோரின் மரபணு மாதிரிகளையும் டொரான்ட் கோரி வந்தார்.
இம்முயற்சி வெற்றியளிக்காத நிலையில், தனது நிலைமை தொடர்பில் 2ஆம் எலிஸபெத் ராணிக்கும் அவர் கடிதமொன்றை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இளவரசர் வில்லியமுக்கு முன்னரே பிறந்தவர் என்ற வகையில் தானே மன்னர் சார்ள்ஸின் முடிக்குரிய முதல் வாரிசாக இருக்க வேண்டும் என்கிறார் டொரன் டே.
சார்ள்ஸ், டொரன்ட், கமீலாவின் இளமைக்கால தோற்றங்கள்.
2 ஆம் எலிஸபெத்தின் மறைவுக்குப் பின்னர் 3 ஆம் சார்ள்ஸ் மன்னரானார். அதையடுத்து அவரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம், வேல்ஸ் இளவரசராகியுள்ளார். அரியணை ஏறுவதற்கான வாரிசுகளில் முதல் நிலையிலுள்ளவருக்கே இப்பட்டம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘அரசிக்கும் எனது பிள்ளைகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள் எனக்கும் ஏனைய பலருக்கும் வியப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த ஒற்றுமைகள் காரணமாகவே நான் சார்ள்ஸின் மகன் எனக் கூறுவதாக பலர் எண்ணுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல.
எனது பிள்ளைகள் பிறப்பதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே, சார்ள்ஸும் கமீலாவுமே எனது பெற்றோர் என எனக்கு கூறப்பட்டது. இது தொடர்பாக நான் ஆராய்ந்தேன். அதற்கு இந்த ஆதாரங்கள் வலிமை சேர்க்கின்றன’ என டொரன்ட் டே தெரிவித்துள்ளார்.
டொரன்ட் டே, மன்னர் 3 ஆம் சார்ள்ஸ்
இந்நிலையில், இளவரசர் வில்லியமை வேல்ஸ் இளவரசராக மன்னர் சார்ள்ஸ் அறிவித்ததால் தான் பணிநீக்கம் செய்யப்பட்டதைப் போல் உணர்வதாக டொரன்ட் டே கூறுகிறார்.
2 ஆம் எலிஸபெத் அரசி இறந்த பின்னர் தனது அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து உலகம் முழுவதுமிருந்து ஊடகங்களும் அரச குடும்ப விசிறிகளும் தன்னை கேட்கின்றர் என டொரன்ட் டே கூறுகிறார்.
மன்னர் சார்ள்ஸையும் அவரின் மனைவி கமீலாவையும் மரபணு பரிசோதனைக்கு உட்பட நிர்ப்பந்திப்பதற்கான சாத்தியம் குறித்து சிரேஷ்ட சட்ட அறிஞர்களுடன் தான் கலந்துரையாடியதாகவும், இதற்கு அவர்கள் சாதகமான கருத்து தெரிவித்ததாகவும் டொரன்ட் டே கூறுகிறார்.
மரபணு பரிசோதனை கோரிக்கைக்கு சார்ள்ஸ் பதிலளிக்காததால் தான் ஏமாற்றடைந்துள்ளாக டொரன்ட் டே கூறுகிறார்.
‘அவர் எனது தந்தை இல்லையென்றால், இப்பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பதற்கான கட்டத்தை சார்ள்ஸ் கடந்து சென்றுவிட்டார்.
அவர் பதிலளிக்காமல் இருப்பது மேலும் பல சந்தேகங்களை எனக்கு ஏற்படுத்துகிறது என டொரன்ட் டே தெரிவித்துள்ளார்.
‘நான் மீண்டும் குடும்ப நீதிமன்றத்துக்கு செல்வேன். கடந்த தடவை நான் நான் நீதிமன்றம் சென்றபோது, சகல ஆதாரங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்டால் மரபணு பரிசோதனை கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என நீதிபதி கூறினார்’ என்கிறார் சைமன் டொரன்ட் டே.
0 Comments