கடந்த காலங்களில் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக 25 ஆயிரம் ரூபா பதிவுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொண்டுள்ள 65 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரிகள் தங்களது பதிவுக்கட்டணத்தை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ளலாம் என அரச ஹஜ் குழு அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் ஹஜ் உம்ரா அமைச்சு ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளின் வயதெல்லையை 65 வயதாக கட்டுப்படுத்தியுள்ளதையடுத்து அரச ஹஜ் குழு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் கருத்து தெரிவிக்கையில் ‘ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் விண்ணப்பித்த ஆயிரக் கணக்கானோரின் நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரிகள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றார்கள். சவூதி அரேபிய ஹஜ் அமைச்சின் புதிய நிபந்தனைகளின் படி 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்ள முடியாது. மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக விண்ணப்பித்தோரில் அநேகர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறானவர்கள் தங்களது விண்ணப்பப்பதிவுக் கட்டணத்தை மீளப்பெற்றுக்கொள்ள முடியும் என அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் தெரிவித்தார்.
ஹஜ் விண்ணப்ப பதிவுக் கட்டணத்தை மீளப்பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
நன்றி...
விடிவெள்ளி
0 Comments