தெல்தோட்டை பிரதேசம் விளையாட்டு துறைக்கு கூடிய முக்கியத்துவம் கொடுக்கும் பிரதேசமாக இருந்த பொழுதும் மிக நீண்ட காலமாக அங்கு ஒரு விளையாட்டு அரங்கம் இல்லாத குறை தொடர்ந்து வந்தது. இதன் காரணமாக இளைஞர்கள் தங்களது விளையாட்டுத் திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் பாடசாலை மாணவர்களது இணைப் பாடவிதான செயற்பாடுகளை மேற்கொள்வதிலும் பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.
எனவே இந்த குறையினை தீர்க்கும் வண்ணம் தெல்தோடையில் நலன்புரி அமைப்புக்கள், விளையாட்டு அமைப்புகள் மற்றும் பிரதேச வாசிகள் ஒன்றிணைந்து DEMODORA என்கிற இந்த விளையாட்டு அரங்கினை அமைப்பதை மையப்படுத்தி HYDA அபிவிருத்தி மன்றத்தினை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இவர்களின் அயராத முயற்சியின் பலனாக விளையாட்டு அரங்கினை அமைப்பதற்கு பொருத்தமான காணி நிலம் ஒன்று கொள்வு செய்யப்பட்டு அதன் ஆரம்ப பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்காக அக்குறணை பிரதேச சபை கௌரவ தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் பொருளாதார ரீதியான பங்களிப்புகளை நல்கி இருந்தை பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இந்த விளையாட்டு அரங்கினுடைய பணிகளை பூரணப்படுத்துவதற்கு பல நலன் விரும்பிகள், நலன் விரும்பி அமைப்புக்கள் மற்றும் பிரதேசத்தின் வர்த்தகர்கள் தங்களது பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர். தெல்தோட்டை பிரதேசத்துக்கு மட்டுமல்லாது கண்டி மாவட்டத்திற்குமே ஒரு குறையாக இருக்கும் இந்த விளையாட்டு அரங்கினை அமைப்பதின் ஊடாக பல இளைஞர்களது விளையாட்டு திறன்களை வளர்த்து அவர்களை விளையாட்டு துறையில் மிளிரச் செய்ய முடியும் என HYDA அபிவிருத்தி மன்றம் எதிர்பார்க்கின்றது.
இந்த விளையாட்டு அரங்கின் முதற்கட்ட பணிகளை ஆரம்பிப்பது தொடர்பான விழா அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதீன் அவர்களின் தலைமையில், தெல்தோட்ட பிரதேச செயலாளர் அவர்களது பங்களிப்புடன் தெல்தோட்ட அல்ஹூஸ்னா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நலன்விரும்பிகள், ஊர் பிரமுகர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments