Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அல் குர்ஆனின் இலக்கு...

 

உலகம் இருக்கும் வரையும் பிறக்கும் ஒவ்வொருவரதும் இம்மை மறுமை வாழ்வின் விமோசனத்திற்கும் சுபீட்சத்துக்கும் நேர்வழிகாட்டுவதற்காக சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்தஆலாவினால் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஊடாக உலகிற்கு அருளி செயல்படுத்திக் காட்டப்பட்டிருப்பது தான் அருள் மறையாம் அல் குர்ஆன் ஆகும். முப்பது ஜுஸுஉ களாக அமைந்திருக்கும் இக்குர்ஆன், 6666 வசனங்களை 114 அத்தியாயங்களாகக் கொண்டமைந்துள்ளது.

இக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் மனித வாழ்வுடன் சம்பந்தப்பட்டுள்ளது. இவ் உலகில் மனிதன் தன் வாழ்வை அல்லாஹ்வின் கட்டளைக்கும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளுக்கும் அமைய அமைத்துக் கொள்வதற்கு தேவையான அத்தனை வழிகாட்டல்களையும் அறிவுரைகளையும் அது தன்னகத்தே கொண்டிருக்கின்றது.

இந்த வழிகாட்டல்களும் அறிவுரைகளும் முற்றிலும் நடைமுறைச் சாத்தியமானவை. அவை பரந்துபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டதாக வகுத்தளிக்கப்பட்டுள்ளன. இதன் நிமித்தம் அறிவியல் உண்மைகள், கடந்த கால வரலாறுகள் என அனைத்து வித எடுகோள்கைளயும் அல்லாஹ் கையாண்டுள்ளான்.

அதாவது மனிதன் மீது அல்லாஹ் கொண்டிருக்கும் அன்பு, கருணையின் அடிப்படையில் ஈருலகிலும் அவன் சுபீட்சம் விமோசனம் அடைந்திட வேண்டும் என்பதை இலக்காகவும் நோக்காகவும் கொண்டமைந்திருக்கின்றது இக்குர்ஆன்.

அதனால் தான் இருபதாம் நூற்றாண்டின் முன்னணி இஸ்லாமிய சிந்தனையாளர்களில் ஒருவர், 'குர்ஆனின் செயற்களே மனிதனின் உள்ளமும், அவனது வாழ்வும் தான்' என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

அது தான் உண்மை. அல் குர்ஆனை எடுத்து நோக்கினால் அது தனித்துவம் மிக்க கண்ணோட்டத்தையும் தனித்துவமான சமூக அமைப்பையும் மனித சமூகத்தை வழிநடாத்தும் முன்மாதிரியான சமூகத்தையும் உருவாக்க எதிர்பார்ப்பதை அவதானிக்கலாம். அதற்கான அடித்தளத்தையும் தனித்துவம் மிக்க முறையிலேயே அல் குர்ஆன் இடக்கூடியதாக உள்ளது. மனிதனின் கண்ணோட்டம், கொள்கை, உணர்வுகள், புரிதல்கள், பண்புகள், செயற்பாடுகள், தொடர்புகள் உள்ளிட்ட அனைவற்றிலும் கவனம் செலுத்தியுள்ள இக்குர்ஆன், அவனது இயல்பு சிதைந்துவிடாத அளவுக்கு அவனை சீர்படுத்தவும் அவனுக்கு வழங்கப்பட்ட ஆற்றல்களை அவன் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு அவன் வாழும் சூழலை சீர்படுத்தக்கூடியதாகவும் விளங்குகின்றது.

நபி (ஸல்) அவர்களுக்கு கட்டம் கட்டமாக அருளப்பட்டு 23 வருட காலப்பகுதியில் முழுமைப்படுத்தப்பட்ட இந்த அருள்மறை, உலகம் இருக்கும் வரையும் உயிரோட்டம் மிக்க இறைவழிகாட்டலாகவும் அமைந்திருக்கின்றது. என்றாலும் இக்குர்ஆனின் வசனங்களும் அறிவுரைகளும் கட்டளைகளும் 1400 வருடங்களுக்கு முன்பு மக்கா, மதீனாவில் வைத்து நபிகளாருக்கு அருளப்பட்டவை என்றாலும் அவை அன்றைய கால சூழ்நிலைக்கு மாத்திரமுரிய வசனங்கள், அறிவுரைகள் எனக் கருதவோ நோக்கவோ முடியாது. அதற்கான அடையாளங்களோ தடயங்களோ அவற்றில் இல்லை. அத்தோடு அல் குர்ஆனின் வசனங்கள் செயலிழந்தவையோ வெற்றுத் தத்ததுவங்களோ அல்ல. இன்றைய யுகத்திற்கு பயன்படாதவை என்று அவற்றில் எதுவும் இல்லை. இக்குர்ஆனின் வசனங்கள் அன்றைய காலப்பகுதியில் அருளப்பட்டவையான போதிலும் அவற்றை காய்தல் உவத்தல் இன்றி நோக்கும் போது கால, இட, நேரங்களைக் கடந்து அவை எல்லா கால, இட நேரங்களோடு உயிரோட்டத்துடன் அளவலாவுவதையும் நடைமுறைச் சாத்தியமாக விளங்குவதையும் காணலாம்.

எந்தக் காலச்சூழ்நிலையில் பிறந்தாலும் மனிதனின் தேவைகள், அவனது எதிர்பார்ப்புகள் என்பவற்றை கருத்தில் கொண்டு நேர்வழிகாட்டக்கூடிய ஒழுங்கைமைப்பை அல்லாஹ் இக்குர்ஆனுக்கு வழங்கியுள்ளான். அதன் எல்லா வசனங்களும் வழங்கிக் கொண்டிருக்கும் அறிவுரைகளும் கட்டளைகளும் உலகம் இருக்கும் வரையும் பிறக்கும் ஒவ்வொருவரதும் மனித வாழ்வுக்கு பயன்படக்கூடியவை. குர்ஆனின் வசனங்கள் மனிதனுடன் நேரடியாக உரையாடக்கூடியனவாகும். அவன் எதிர்கொள்ளும் சவால்கள், நெருக்கடிகள், பிரச்சினைகள் என்பவற்றுக்கு தீர்வாகவும் அவனுக்கு ஆறுதல்களாகவும், அறிவுரைகளாகவும் மாத்திரமல்லாமல் அவனது ஈருலக வாழ்வின் விமோசனத்திற்கு தேவையான அறிவுரைகளாகவும் வழிகாட்டல்களாகவும் இவ்வசனங்கள் அமைந்துள்ளன. இந்த வசனங்களை அதற்கேயுரிய ஒழுங்கில் அணுகும் போது தனிமனிதனும், சமூகமும் நிச்சயம் விமோசனம் பெற்றே தீரும். அதற்கு இந்த வசனங்களைப் பெற்றுக் கொண்ட முதலாவது தலைமுறையினரான ஸஹாபாக்கள் நல்ல உதாரணமாகும்.

அருள்மறை அல் குர்ஆன் அருளப்படும் போது அந்த அராபிய சமூகத்தினர் சமய, சமூக, கலாசார மற்றும் பழக்கவழக்கங்கள் உட்பட எல்லா வகையிலும் பின்னடைவுக்கு உள்ளானவர்களாகக் காணப்பட்டனர். அவர்கள் கோத்திர வாழ்க்கை முறையைக் கொண்டவர்களாகவும் நாடோடிகளாகவுமே இருந்தனர். அறிவு மற்றும் பழக்கவழக்க ரீதியில் அவர்கள் வளர்ச்சி அடைந்திருக்க இல்லை. அதனால் அன்றைய உலகில் அராபிய பிரதேசமும் அங்கு வாழ்ந்த மக்களும் எவ்வித முக்கியமற்றவர்களாகவே இருந்தனர். அவர்களை எவரும் ஏரெடுத்தும் பார்க்கவில்லை.

இவ்வாறான சமூகத்தினர் மத்தியில் பிறந்து வளர்ந்த நபி (ஸல்) அவர்களைத் தெரிவு செய்து தான் அல்லாஹ் இக்குர்ஆனை அருளினான். அந்த சமூகத்தினர் மூலம் இஸ்லாத்தை இந்த உலகில் நிலை நிறுத்திய அல்லாஹ், அச்சமூகத்தினர் ஊடாக மனிதனின் வரலாற்று ஒட்டத்தில் பாரிய திருப்புமுனையையும் அழியாத்தடத்தையும் ஏற்படுத்தினான். இதன் ஊடாக மனித வரலாறு முன்னொரு போதும் கண்டிராத மாபெரும் புரட்சியையும் திருப்பு முனையையும் கண்டு கொண்டது. இதன் விளைவாக அந்த மக்களை உலகமே திரும்பி பார்க்கும் நிலைமை உருவானது.

அந்த முதல் தலைமுறையினர் நடமாடும் குர்ஆனிய மனிதர்களாக உருவாகினர். அவர்கள் மனிதப் புனிதர்களாகத் திகழ்ந்தனர். அன்றைய உலகில் முன்னேறிய சமூகத்தினராக அவர்கள் வளர்ச்சி பெற்றனர். அதன் பயனாக உலகம் இருக்கும் வரையும் அவர்களது பெயர் உச்சரிக்கப்படும் போது 'ரழியல்லாஹ் அன்ஹு' என்று கூறப்படக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு அந்த மனிதர்களை 'வானில் மின்னும் நட்சத்திரங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சிலாகித்து கூறியுள்ளார்கள். உலகம் இருக்கும் வரையும் முன்மாதிரி மிக்கவர்களாகவும் நினைவு கூறப்படக்கூடியவர்களாகவும் அவர்கள் மாற்றம் அடைந்தனர்.

இவ்வாறான அந்தஸ்தையும் கௌரவத்தையும் மாற்றத்தையும் அவர்களுக்கு அல் குர்ஆன் தான் பெற்றுக்கொடுத்தது. ஆனாலும் அவர்கள் இக்கௌரவத்தையும் அந்தஸ்தையும் எடுத்த எடுப்பில் அடைந்து கொள்ளவில்லை. அதற்கான தியாகங்கள், அர்ப்பணிப்புக்களை அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களுக்கும் ஏற்ப அவர்கள் செய்தார்கள்.

அதற்கேற்ப அந்த தலைமுறையினர் உயர்ந்து சென்றனர். அந்த முதல் தலைமுறையினர் குர்ஆன் ஊடாக அடைந்து கொண்ட கௌரவத்தையும் அந்தஸ்தையும் இன்றைய தலைமுறையினரும் அடைந்து கொள்ள முடியும். அல் குர்ஆனையும் ஸுன்னாவையும் அதற்கு ஏற்ப அணுக வேண்டும்.

அன்றைய ஸஹாபாக்கள் அல் குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் தம்முடன் உரையாடுவதாகவும் தம் வாழ்வுடன் சம்பந்தப்பட்டதாகவுமே நோக்கினர். தம் வாழ்வுக்கு அவசியமானதும் தம் வாழ்வுடன் சம்பந்தப்பட்ட விடயங்களையுமே இவ்வசனங்கள் பேசுகின்றன என்று தான் அவர்கள் கருதினர். அணுகினர். அல் குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் மனித வாழ்வுடன் நெருக்கமானதும் ஆழமானதுமான தொடர்பைக் கொண்டுள்ளன.

-மர்லின் மரிக்கார்-

Post a Comment

0 Comments