"எல்லோருமே தோனியை மிஸ் செய்கிறார்கள்; ஏனெனில் அவருடைய அனுபவம் மிகவும் முக்கியமானது'' என்கிறார் ஷர்துல் தாகூர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா 1 – 0 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறும் 2வது போட்டியில் வென்றாக வேண்டிய வாழ்வா – சாவா நிலைமைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இந்தப் போட்டி முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஷர்துல் தாகூர், முன்னாள் கேப்டன் தோனியை நினைவுக் கூர்ந்தார். அவர் கூறுகையில் "எல்லோருமே தோனியை மிஸ் செய்கிறார்கள். ஏனென்றால் அவருடைய அனுபவம் மிகவும் முக்கியமானது. தோனி 300க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள், நிறைய டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதுபோன்ற அனுபவமிக்க வீரரை நீங்கள் சந்திப்பது அரிது. ஒரு போட்டியின் முடிவைப் பொறுத்து பவுலர்களை விமர்சிப்பதை நாம் தவிர்க்க வேண்டும். ஆடுகளத்தின் நிலைமையை நாம் முதலில் பார்க்க வேண்டும்.
சில நேரங்களில் நாங்கள் 350 ரன்கள் இருக்கும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறோம். இப்படியான போட்டிகளில் எல்லா பந்து வீச்சாளர்களுமே ரன்களை கொடுப்பார்கள். நாங்கள் ஒரு அணியாக எப்பொழுதும் முழுதாக எதிரணியிடம் சரணடையும் ஆட்டத்தை விளையாடியது கிடையாது. தோல்வி என்றாலும் சண்டையிட்டுத்தான் முடிவைப் பெறுவோம். நாங்கள் சில தோல்விகளை மட்டுமே சந்தித்து பெரும்பாலும் தொடரை 2-1 என வெற்றிகரமாகவே முடித்துள்ளோம்.
நான் தொடர்ந்து பேட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறேன். பேட்டிங்கில் 7,8,9வது இடத்தில் பந்துவீச்சாளர்கள் ரன் பங்களிப்பை தருவது அணிக்கு மிகவும் பயனுள்ள ஒரு விஷயம். நான் இப்படி இருக்கவே விரும்புகிறேன். ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், ஸ்டார்க் பின்வரிசையில் பங்களிப்பை தருவது போல நான் செயல்பட விரும்புகிறேன்.
15, 20 ரன்கள் இப்படி கிடைப்பது அணிக்கு வெற்றி வித்தியாசத்தை அதிகரிக்கும். உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது என்பது ஒவ்வொரு வீரருக்கும் பெரிய கனவாகும். இந்த முறை எனக்கு டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் பரவாயில்லை. என்னுடைய இலக்கு அடுத்து இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவதுதான். நான் அதை நோக்கித்தான் தயாராகி வருகிறேன்” என்று ஷர்துல் தாகூர் கூறினார்.
0 Comments