Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பேருவளை ஜாமியா நளீமிய்யாவில் இவ்வருட தேசிய மீலாத் விழா...!


முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டிலான இவ்வருடத்திற்கான (2022) தேசிய மீலாதுன் நபி விழா எதிர்வரும் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேருவளை, ஜாமியா நளீமிய்யா கலாபீட மாநாட்டு மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அல்ஹாஜ் இப்றாஹீம் அன்ஸார் நேற்று தெரிவித்தார்.

இவ்வருட மீலாத் தின நிகழ்வுகள் தொடர்பாக சீனன்கோட்டை பள்ளிச்சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள், பிரதேச அமைப்புகளின் முக்கியஸ்தர்களுடனான விசேட சந்திப்பு நேற்று முன்தினம் (01) சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.இதன்போதே மேற்படி இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தின் நீண்டகலந்துரையாடலின் பின்னர் அனைவரினதும் ஏகோபித்த முடிவாக தேசிய மீலாத் தின நிகழ்வுகளை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தில் நடாத்துவதெனவும் இதற்காக பூரண ஒத்துழைப்புகளை சீனன்கோட்டை பள்ளிச்சங்கம் தலைமையிலான ஊர் பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து வழங்க முன்வந்துள்ளதை தான் மனப்பூர்வமாக வரவேற்பதாக திணைக்கள பணிப்பாளர் இப்றாஹீம் அன்ஸார் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் விழாவில் பிரதம அதிதியாக மாண்புமிகு பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதியாக கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, வெளிநாட்டு அமைச்சர் அலிசப்ரி மற்றும் விசேட அதிதிகளாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான மர்ஜான் பளீல், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோரும் கலந்து சிறப்பிப்பர். 

நிகழ்வில் மேலும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், பள்ளிவாசல் சங்க பிரதிநிதிகள், நளீமிய்யா கலாபீட முக்கியஸ்தர்கள், உலமாக்கள், சர்வமத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக திணைக்கள பணிப்பாளர் இப்றாஹீம் அன்ஸார் தினகரனுக்கு தெரிவித்தார். மேலும் விழாவை சிறப்பிக்குமுகமாக நளீமிய்யா கலாபீடத்தை பிரதிபலிக்கும் வகையில் முதல் நாள் முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments