அறிவியல் வளர்ச்சியும் நாகரீக முதிர்ச்சியும் அடைந்துள்ள இக்காலகட்டத்தில் நாளுக்கு நாள் நிமிடத்திற்கு நிமிடம் உலகின் நாலா பக்கங்களிலும் பல்வேறு பிரச்சினைகள் தோன்றிய வண்ணமுள்ளனன. பிரச்சினைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மனித சமுதாயம் தவித்துக் கொண்டிருக்கின்றது. நிம்மதியின்றி, வாழ வழியின்றி நரக வாழ்க்கை வாழும் தற்கால மனித சமூகத்துக்கு இவற்றிலிருந்து விடிவு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியே. ஆனால் இப்பிரச்சினைகளுக்கெல்லாம் விடையும் தீர்வையும் கொண்டதாகவே இஸ்லாம் விளங்கிக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வை முன்மாதிரியாகக் கொண்டு வாழும் போது பாரெங்கும் அமைதி, சுபீட்சம் தானாக உருவாகும். நபியவர்களைப் படைப்பதற்காகவே, உலகத்தை இறைவன் படைத்தான் என்பதால் அவர்களிலே, வேறு எவரிலும் இல்லாத விசேடத்தன்மை, மகத்துவம் இருக்கின்றது என்பதனை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் அன்பும்-பண்பும் கொண்ட பொறுப்புள்ள குடும்பத்தலைவராகவும், நாணயமுள்ள வர்த்தகராகவும், வீரமுள்ள தளபதியாகவும், தலைசிறந்த சீர்திருத்தவாதியாகவும், நீதி வழுவா ஆட்சியாளராகவும், அறிவின் சிகரமாகவும் திகழ்ந்துள்ளார்கள். இவற்றை அன்னாரது வாழ்க்கைச் சரிதையும் பொன்மொழிகளும் தெளிவாக எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இதன்படி நபி (ஸல்) அவர்கள் முழு மனித வாழ்வுக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியுள்ளார்கள் என்பது மிகவும் தெளிவானது. அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றி நாமும் வாழ்வோமாயின் வாழ்க்கையில் எதுவித இடர்பாடுமின்றி ஈருலகிலும் மகிழ்ச்சிகரமான வாழ்வைப் பெற்றுக் கொள்ளலாம்
நபி (ஸல்) அவர்கள் பிறந்தபோது அரபு நாட்டின் நிலை எந்தளவுக்கு பின்னடைவுக்கு உள்ளாகி, சீரழிந்து இருந்தது என்பதை அக்காலத்தை விழிக்கப் பயன்படுத்தப்படும் 'அய்யாமுல் ஜாஹிலிய்யா' என்ற பதம் குறித்து நிற்கின்றது. 'அய்யாமுல் ஜாஹிலிய்யா' என்ற அரபுப்பதத்தின் பொருள் 'அறிவிலிகளின் காலம்' என்பதாகும். அறிவுத்துறையின் உச்சியிலே, விஞ்ஞானத்தின் விளிம்பிலே இருக்கும் இன்றைய சமூகத்தை அன்றைய 'அய்யாமுல் ஜாஹிலிய்யா' கால சமூகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறுபாட்டை அவதானிக்க முடியும். வாழ வழியின்றி, வழிகாட்டியின்றி, வழிகேட்டின் மொத்த உருவமாக இருந்த அச்சமூகத்தை இருளிலிருந்து ஒளியின்பாலும், வழிகேட்டிலிருந்து நேர்வழியின்பாலும், மிருக சுபாவத்திலிருந்து மனித சுபாவத்துக்கும் திசை திருப்பிடவே நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப உழைத்தார்கள். அதன் பிரதிபலன்களை அன்னார் வாழ்ந்த சமூகம் முதல் ஒவ்வொருவரும் அடைந்து கொள்ளும் நிலை உருவானது.
'முட்டாளோடு பேச எட்டாளும் போதாது' என்றொரு உவமை உள்ளது. ஆனால், மடமை யுகத்திலே முரட்டு சுபாவம் நிறைந்து கல்நெஞ்சம் கொண்ட மக்களைத் தனியே நின்று புனிதர்களாக மாற்றிய நபி (ஸல்) அவர்கள் ஆழமான அகச் சிந்தனையாளராக இருந்துள்ளார்கள். அன்றைய யுகம் அறிவியல் துறையில் மிகவும் பின்தங்கிய காலகட்டமாக இருந்தது. இன்று அவ்வாறான நிலைமை இல்லை.
அண்ணலாரின் அற்புத வாழ்க்கை வரலாறே, அவர்களது வாழ்வு மனிதனைப் புனிதனாக மாற்றவல்லது என்பதை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கின்றன. அறிவுலக மேதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் 'முஹம்மது நபி (ஸல்) அவர்களது விருத்தாந்தத்தைப் பகுத்தறிவோடு, சிந்தனைத் தெளிவோடு படிக்கும் எவரும் அவர்கள் மீது உவப்பு வைக்காவிடில் உண்மையில் அவர்களது வரலாற்றைப் படித்தவரல்ல' என்று கூறியுள்ளார்கள்.
மேலும் நபி(ஸல்) அவர்கள் நற்குணத்தின் மொத்த உருவமாக இருந்தார்கள். 'கற்கண்டு எந்தப்பக்கத்தைக் கடித்தாலும் இனிக்கும்'. அதேபோன்று அகிலத்திற்கோர் அருட்கொடையாக அரேபியாவில் அவதரித்த நபி(ஸல்) அவர்களின் வாழ்வின் எல்லாப் பகுதியும் அமைந்துள்ளது. அவர்களது வாழ்வில் சிறிதளவேனும் கோணல் கிடையாது. இதற்கு அன்னாரது வாழ்வொழுங்கே சிறந்த முன்மாதிரியாகும்.
இது குறித்து அல்லாஹ்தஆலாவே, 'நபியே! உம்மை உலகத்தார் யாவருக்கும் ஓர் அருளாகவே அனுப்பியிருக்கிறோம்' (அல் குர்அன் 21:107) என்று குறிப்பிட்டு வைத்திருக்கின்றான். இதன்படி நபி (ஸல்) அவர்கள் குறித்த ஒரு சமூகத்தினருக்கு மாத்திரமன்றி முழு மனித சமூகத்திற்குமே அருளாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
அதேநேரம் 'உங்களில் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் உறுதியாக நம்புகின்றவர்களுக்கு அழகிய முன்மாதிரி நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் இருக்கிறது. அவர்கள் (அவரைப் பின்பற்றி) அல்லாஹ்வை அதிகமாக நினைத்து (துதி செய்து) கொண்டிருப்பார்கள்' (அல் குர்ஆன் 33:21) என்றும் அல்லாஹ்தஆலா தன் அருள்மறையில் தெளிவாகக் குறிப்பிட்டு வைத்திருக்கின்றான்.
மேலும், 'நூன், எழுதுகோலின் மீதும், அவர்கள் எழுதியவைகளின் மீதும் சத்தியமாக... (நபியே!) நீர் உமதிறைவனருளால் பைத்தியக்காரரல்லர்.
மேலும், நிச்சயமாக உமக்கு முடிவுறாத கூலியும் இருக்கின்றது. நிச்சயமாக நீர் மகத்தான நற்குணங்கள் உடையவராகவே இருக்கின்றீர்'. (அல் குர்ஆன் 68:1-4) என்று அல்லாஹ்தஆலாவே நபி (ஸல்) அவர்களின் அருங்குணத்திற்கு நற்சான்றிதழ் அளித்து இருக்கின்றான்.
அதனால் அண்ணலாரைப் பின்பற்றும் போது தமது வாழ்வு ஒளிமயமானதாகவும், நற்குணம் நிரம்பியதாகவும் விளங்கும் என்பதை இவ்வசனங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எனவே நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு முழு வாழ்வையும் அமைத்துக் கொள்வதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும்.
அதன் ஊடாக இம்மையிலும் மறுமையிலும் சுபீட்சமும் விமோசனமும் அடைந்து கொள்ள முடியும். அந்த விமோசனத்தையே இலக்காககவும் நோக்காகவும் கொண்டு செயற்படுவோம்.
- நாவின்ன பைஸல் -
0 Comments