மனித உறவுகளை பல மிக்கதாகவும், உறுதியானதாகவும் அமைத்துக் கொள்ள இஸ்லாம் அடையாளப்படுத்தும் மிக பிரதான ஓர் அடிப்படை சமூக நீதியாகும். சமூகங்களுக்கிடையில் சமாதானம் மலர்ந்து, அமைதியும், மகிழ்ச்சியும் செழித்தோங்க வேண்டுமெனில் சமூகங்களுக்கிடையில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் பலமான கட்டளை.
'நீதம்' என்ற இந்த உயரிய தெய்வீகப் பண்பு படைப்பினங்களுக்கு இடையில் பிரயோகப்படுத்துவதற்கான வரைவிலக்கணத்தை முன்வைப்பதில் அறிஞர்கள் பல்வேறு வகையான கருத்துக்களை கொண்டிருந்தாலும் அதிகமான அறிஞர்கள் பின்வரும் கருத்தையே வித்தியாசமான நடைகளில் முன்வைத்துள்ளார்கள். அதாவது நீதம் ஒவ்வொரு விவகாரத்திலும் எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்த முறையில், எந்த அளவில், வீண் விரயம், பொடுபோக்கு, முற்படுத்தல், பிற்படுத்தல் என்பன முற்றாக தவிர்க்கப்பட்டு எவ்வாறு கையாளப்படவேண்டுமோ அவ்வாறு கையாள்வதற்கே நீதி எனப்படும். (ஆதாரம்: அல்-ஜாஹிழ், தஹ்தீபுல் அஹ்லாக்)
எனவே நீதி என்பது மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் பின்னிப்பிணைந்து இருக்கக்கூடிய ஒரு அம்சம் என்பதை மேற்குறிப்பிடப்பட்ட வரைவிலக்கணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். மனித வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் சமநிலையோடும், அமைதியோடும் பயணிப்பதற்கான அச்சாணியாகவே இது பார்க்கப்படுகிறது. இது மாத்திரமன்றி மனிதனது ஒவ்வொரு செயற்பாடும் இறை திருப்தியை பெற்றதாகவும், இறை விசுவாசத்திற்கு உட்பட்டதாகவும் மாறுவதற்கும் அங்கு நீதம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதாக அல்லாஹ் எமக்கு பணிக்கிறான்.
நீதியை நிலைநாட்டுவதில் எவ்வித பாரபட்சமோ, பாகுபாடோ காட்டப்படக்கூடாது. அது அல்லாஹ்வுடைய திருப்தியை மட்டும் நாடியே நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு எவ்வித முன்னுரிமையும் கொடுக்கக்கூடாது என்பதும் அல்குர்ஆன் எமக்கு விடுக்கின்ற கட்டளையாகும்.
அல்லாஹுத்தஆலா மனித குலத்தின் மாண்புமிகு மகுடமாக நீதியை ஆக்கி வைத்துள்ளான் என்பதும், அது மானுடப்படைப்பினங்கள் அனைத்திலும் சமநிலையோடு கையாளப்பட வேண்டும் என்பதையும் தெளிவு படுத்துகின்றான். நீதியை நிலைநாட்டுவதில் இனம், மதம், மொழி, சொந்தம், பந்தம் என்று எதுவுமே கருத்தில் கொள்ளப் படாமல் நீதத்தின் பிறப்பிடமாகிய அந்த அல்லாஹ்வை முன்னிறுத்தியே செயல்பட வேண்டும் என்பதை எமக்கு வலியுறுத்துகிறான். (ஆதாரம்: தப்ஸீர் அல்-குர்துபி)
இஸ்லாத்தின் உயர்ந்த பெறுமானங்களையும் அதன் அழகையும் ஒருவர் மொத்தமாக புரிந்து கொள்வதற்கு அதன் நீதிக்கோட்பாட்டையும் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்வதே போதுமானதாகும். யாராக இருந்தாலும் நீதம் பேணப்பட வேண்டும் என்பதே இஸ்லாத்தின் பலமான நிலைப்பாடு. இதன் காரணமாகத்தான் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நெகிழ்வுத் தன்மையுடனும், விட்டுக்கொடுப்புடனும், வன்மமற்ற போக்குடனும் நடந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள் உரியவருக்கு உரிய நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற விடயத்தில் மிக உறுதியாகவும், காத்திரமாகவும் செயல்பட்டார்கள். இதற்கு பல நிகழ்வுகள் சான்றாகும்.
எந்த சமூகம் நீதிக்குப் புறம்பாக செயல்படுமோ அது அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அவ்வாறே மனிதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வோடும் குல, கோத்திர வேறுபாடுகளோடும் அநீதியின் வழியில் செயல்படுபவர்களின் வாழ்வும் நிம்மதி இழந்து அமைதி அற்றதாக மாறிவிடும் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்கள். ஒரு தேசத்தின் நிலைபேறான வெற்றிக்கான ஆணிவேராக நீதியை நிலைநாட்டுதல் எனும் உயரிய கருத்தாடலே கருதப்படுகின்றது என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
இஸ்லாத்தின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறிப்பாக, பிற சமயத்தவர்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட மிகச்சிறந்த செயற்திட்டமாகவே மதீனா சாசனம் விளங்குகிறது. மனித உரிமைகள் பற்றி கொள்கை வகுப்பதிலும் செயல்படுத்துவதிலும் நபி (ஸல்) அவர்களால் மேற்கொள்ளப்பட்ட இச்சாசனமே முதன்மையானது. இவை வெறும் சித்தாந்தங்களாகவோ, வாய்வார்த்தைகளாகவோ நின்று விடாமல், முஸ்லிம்களின் ஆட்சி உலகில் நிலவிய காலமெல்லாம் மிகச்சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டன என்பதற்கு வரலாறு சான்றாக உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்குமிடையே சகோதரத்துவப் பிணைப்பை ஏற்படுத்தவும், முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்குமிடையில் பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் எழுதிய சாசனம் பல்வேறு விடயங்களுக்கு ஆதாரமாக இருக்கின்றது. அதாவது இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பு சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கும். இதற்கு அவர்களது வரலாறு சான்றாகும். தீவிர இஸ்லாமிய விமர்சகரான தோமஸ் ஆர்னோல்ட் என்பவரது பின்வரும் கூற்று அவதானத்திற்குரியது.
அபூ உபைதா (ரலி) அவர்கள் தலைமையில் இஸ்லாமியப் படை ஷாம் தேசத்தின் ஜோர்தான் சமவெளியில் உள்ள பஹ்ல் என்ற இடத்தில் தங்கியிருந்த போது, அப்பிரதேசத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் அரேபியர்களை விழித்து பின்வருமாறு ஒரு கடிதம் எழுதினார்கள்.
'முஸ்லிம்களே! பைஸாந்தியர்களை விட உங்களையே விரும்புகின்றோம். அவர்கள் எமது மதத்தை சேர்ந்தோராக இருப்பினும் சரியே. காரணம் நீங்கள் எங்களுடன் விசுவாசமாக நடந்து கொள்கிறீர்கள். எம்மோடு நீங்கள் இரக்கமாக இருக்கின்றீர்கள். எமக்கு அநீதி இழைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்கிறீர்கள். எங்கள் மீதான ரோமர்களது ஆட்சியை விட உங்களது ஆட்சி மிகச் சிறந்தது'. எவ்வளவு மகத்தான சாட்சியம் இது. இஸ்லாத்தின் நீதிக்கோட்பாட்டை தெளிவுபடுத்துவதற்கு இதைவிட வேறெதுவும் தேவையில்லை.
பொதுவாக கி.பி.1789 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரான்சியப் புரட்சியின் அடிப்படையாக வகுக்கப்பட்ட கொள்கையைத் தொடர்ந்து மனித உரிமைகள் பற்றிய சிந்தனை முதல் தடவையாக உருப்பெற்றது என்றும், அதன் அடிப்படையாகவே 1948 இல் ஐக்கிய நாடுகள் சபையின் உலக மனித உரிமைகள் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்டது எனவும் கூறுவர். ஆயினும் மனித உரிமைகள் பற்றிய கொள்கைகளை வகுப்பதிலும் செயல்படுத்துவதிலும் இஸ்லாம் முன்னோடியாக அமைந்தது என்பதை வரலாற்றை காய்தல் உவத்தல் இன்றி நோக்குகின்ற எவரும் மறுக்க முடியாது. (ஆதாரம்: முஸ்லிமல்லாதவர்களின் உரிமைகள்)
சமூகநீதியென்பது தனி நபருக்கும் சமூகத்திற்குமிடையே உள்ள சமமான, நியாயமான உறவை குறிக்கின்றது. தேவைகளை நிறைவு செய்து, பாகுபாடற்ற நீதியையும் நியாயத்தையும் நிலை நிறுத்துவது தான். சமூகப் பெயர்ச்சிக்கான தடைகளை உடைத்து, சமூகப் பாதுகாப்பை உண்டாக்கி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை களைவதாகும். இதிலிருந்து சமூகநீதியென்பது சமூகங்களுக்கிடையில் சாந்தமான உறவை கட்டியெழுப்புவதற்கான பிரதான அம்சம் என்பதை யாரும் மறக்க முடியாது.
கலாநிதி அல்-ஹாபிழ் எம்.ஐ.எம். சித்தீக்
0 Comments