நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவித்துள்ளார்கள்.
'ஒருவர் (நல்லறங்களில் ஈடுபடும் போது) மறுமையின் (நிலையான) வளங்களைப் பெறுவதையே நோக்கமாக கொள்கிறார் எனில், அல்லாஹ் அவருக்கு மனதில் செழிப்பையும் நிறைவையும் அளிக்கிறான். மனஉளைச்சலில் இருந்து அவரை விடுவிக்கிறான். நிம்மதியையும் மன உறுதியையும் அளிக்கிறான். உலகம் அவரிடம் வருகிறது. அவருக்கு முன்பாக எந்த மதிப்பையும் பெறாமல் அற்பமாக அது ஒதுக்கித் தள்ளப்படுகின்ற நிலைக்கு ஆளாகிறது.
இதற்கு நேர்மாறாக, ஒருவர் (நல்லறங்களில் ஈடுபடும் போது) உலக வளங்களையும் செழிப்பையும் ஈட்டிக் கொள்வதையே நோக்கமாகக் கொள்கிறார்கள் எனில் வறுமையையும் பற்றாக்குறையையும் அவருடைய கண்களுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறான்.
அவருடைய செயல்களில் குழப்பத்தையும் மன உளைச்சலையும் கவலையையும் விதைத்து விடுகிறான். இத்தனைக்குப் பிறகும் அவருடைய விதியில் எந்தளவுக்கு ஏற்கனவே தீர்மானமாகி விட்டதோ அந்தளவுக்கு அவருக்கு உலக வளங்கள் கிடைக்கப் பெறுகின்றன'.
எம்மைப் பாடாய் படுத்துகின்ற கவலைகள், மன உளைச்சல்கள், சிந்தனை ரீதியான அலங்கோலங்கள் அனைத்துக்கும் மருந்து மறுமை வளங்கள் மீதான ஆசையை வரித்துக் கொள்வது தான். மறுமையின் நிலையான வளங்களைப் பெற வேண்டும் என்கிற ஆசை ஒருவருக்கு எத்தகைய மனநிம்மதியையும் ஆறுதலையும் தருமெனில் அதை சாதாரண மனிதனால் கற்பனை செய்தும் பார்க்க முடியாது.
உண்மையில் தேடி அடைய வேண்டியதும் விரும்பிப் பெற வேண்டியதுமானது தான் மறுமை தான். எவர் மறுமையின் நிலையான வளங்கள் மீது ஆசையை வளர்த்துக் கொண்டு அவற்றின் மீதே தன்னுடைய பார்வையையும் சிந்தையையும் குவித்து வைத்திருக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் மனநிறைவு என்ற பரிசை அளித்தே தீர்வான். அது மனித வாழ்வைப் புடம்போட்டு பக்குவப்படுத்தக்கூடியதாக இருக்கும்.
தொகுப்பு: மஸ்லமா
0 Comments