Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பிரித்தானியாவில் சீன தூதரகத்திற்குள் ஏற்பட்ட பரபரப்பு…!

 

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் அமைந்துள்ள சீன தூதரகத்திற்குள் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட நபர், பகீர் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

மான்செஸ்டரில் உள்ள சீன துணை தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய பாப் சான்(Bob Chan) என்பவரே, தமக்கு நேர்ந்த கொடூரத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

மாஸ்க் அணிந்திருந்த சிலர் தம்மை தரதரவென இழுத்துச் சென்று, எட்டி உதைத்ததாகவும் சரமாரியாக குத்துவிட்டதாகவும் பாப் சான்(Bob Chan) வெளிப்படுத்தியுள்ளார்.



இந்த விவகாரம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஜேம்ஸ் கிழவேரி (James Cleverly)காட்டமாக தெரிவித்துள்ளார்.

சீனத்து ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு எதிராக மான்செஸ்டரில் அமைந்துள்ள தூதரகம் முன்பு ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே திடீரென்று குறித்த தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சீனாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நபர் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் இறுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹொங்ஹொங்கை சேர்ந்த 30 வயது கடந்த பாப் சான் என்பவரே சம்பவத்தின் போது சீனத்து தூதரக அதிகாரிகளால் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு கடுமையாக துன்புறுத்தப்பட்டவர்.



அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், பதாகைகளை அப்புறப்படுத்த தூதரக அதிகாரிகள் முதலில் கோரியுள்ளனர். ஆனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்க, பாப் சான்(Bob Chan) என்பவர் மீது திடீரென்று பாய்ந்து, தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.

பிரித்தானிய பொலிசார் ஒருவர் துரிதமாக செயல்பட்டு, தூதரக அதிகாரிகளிடம் இருந்து அந்த நபரை மீட்டுள்ளார். இந்த திடீர் தாக்குதலை அடுத்து, தமது குடும்பத்தின் பாதுகாப்பு மீது அச்சம் எழுந்துள்ளதாக பாப் சான் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், சீன தூதரக முக்கிய அதிகாரியிடம் விளக்கம் கேட்டு பிரித்தானியா நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

தற்போது பிரித்தானிய குடிமக்களான ஹொங்ஹொங் மக்கள் சுமார் 40 பேர் தொடர்புடைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாகவும்,மிகவும் அமைதியாகவும் சட்டத்திற்கு உட்பட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஜேம்ஸ் கிழவேரி (James Cleverly)தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய மண்ணில் அவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, சீனா தரப்பில் இந்த விவகாரம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments