Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அரையிறுதிக்கு செல்ல ஸிம்பாப்வேயும் சுப்பர் 12 இல் முதல் வெற்றிக்கு நெதர்லாந்தும் முயற்சி...!

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 8ஆவது ஐசிசி இருபது 20 உலகக்கிண்ண அத்தியாயம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் குழு 2இல் ஸிம்பாப்வேக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டி அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (ஒக் 2) நடைபெறுகிறது.

இப்போட்டி இலங்கை நேரப்படி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது.

அரை இறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொள்ள ஸிம்பாப்வேயும், சுப்பர் 12 சுற்றில் தனது முதலாவது வெற்றியை சுவைப்பதற்கு நெதர்லாந்தும் இன்றைய போட்டியில் முயற்சிக்கும்.

அணிகள் நிலையில் தற்போது 3 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தில் இருக்கும் ஸிம்பாப்வே இன்றைய போட்டியிலும் கடைசிப் போட்டியிலும் சிறந்த நிகர ஓட்ட வித்தியாசத்துடன் வெற்றிபெற்றால், அரை இறுதியில் விளையாடும் தகுதியை பெறுவதற்கு சிறு வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், தென் ஆபிரிக்கா ஒரு போட்டியிலும், இந்தியா 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றால், இந்த 2 அணிகளைத் தவிர்ந்த மற்றைய அணிகளுக்கு அரை இறுதியில் விளையாட முடியாமல் போகும்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மகத்தான வெற்றியீட்டியதன் மூலம் முழு கிரிக்கெட் உலகையும் பிரமிப்பில் ஆழ்த்திய ஸிம்பாப்வே, பரபரப்பை ஏற்படுத்திய அடுத்த போட்டியில் பங்களாதேஷிடம் கடைசிப் பந்தில் தோல்வியடைந்தது.

எனவே, முதலில் நெதர்லாந்தை வெற்றிகொண்டு 5 புள்ளிகளை பெறுவதே ஸிம்பாப்வேயின் நோக்கமாகும்.

அதனைத் தொடர்ந்து உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றை நிறைவுக்கு கொண்டுவரும் கடைசிப் போட்டியில் இந்தியாவை சந்திக்கும்.

எவ்வாறாயினும், இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் இன்று பகல் நடைபெறவுள்ள போட்டியில் அதிசிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் எந்த அணி வெற்றி பெற்றாலும், அரை இறுதிக்கு தகுதிபெறும் ஸிம்பாப்வேயின் எதிர்பார்ப்பு அற்றுப்போகலாம்.

இதேவேளை, "அரை இறுதிக்கு முன்னேறினால், அது எங்களுக்கு சிறப்பம்சமாக அமையும். அத்துடன் எம்மைப் பொறுத்தவரையில், அது மகத்தான ஒரு விடயமுமாகும்" என ஸிம்பாப்வே அணித் தலைவர் க்ரெய்க் இவான்ஸ் தெரிவித்தார்.

"எங்களால் அரையிறுதி வாய்ப்பை பெற முடியும் என வீரர்கள் கருதுகிறார்கள். கடைசி இரண்டு போட்டிகளில் முழுப் பலத்துடன் விளையாடவேண்டும்" என்றார் அவர்.

இது இவ்வாறிருக்க, முதலாம் சுற்றிலிருந்து சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிய பின்னர் ஒரு வெற்றியையேனும் பெறாவிட்டாலும், நெதர்லாந்து அணியில் நேர்மறையான எண்ணம் இருக்கவே செய்கிறது.

'அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என நாங்கள் விரும்பினோம். அது நிறைவேறியமை எங்களை பொறுத்தமட்டில், நேர்மறையான விடயமாகும். சுப்பர் 12 சுற்றில் விளையாடுவது என்பது எங்களுக்கு அற்புதமாக இருக்கிறது" என நெதர்லாந்து வீரர் லோகன் வென் பீக் தெரிவித்தார்.

"முதல் சுற்றில் விளையாடியது போன்று இரண்டாம் சுற்றில் 3 ஆட்டங்களிலும் நாங்கள் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தவில்லை. கடைசி இரண்டு போட்டிகளில் மிகச் சிறந்த முயற்சியையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்துவதை உறுதிசெய்ய எமது வீரர்கள் காத்திருக்கின்றனர். நாங்கள் எமது திறமைகளை இன்னும் வெளிப்படுத்தவில்லை என உண்மையாக உணர்கிறோம். எமது அணியில் திறமைசாலிகள் சிலர் இருக்கின்றனர். கடைசி இரண்டு போட்டிகளில் ஒரே குழுவாக திறமையை வெளிப்படுத்த முடியும் என நம்புகிறோம்" என்றார் அவர்.

அணிகள்:

நெதர்லாந்து: மெக்ஸ் ஓ'டவ்ட், விக்ரம்ஜித் சிங், பாஸ் டி லீட், கொலின் அக்கர்மன், டொம் கூப்பர், ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), டிம் ப்றிங்ள், லோகன் வென் பீக், ஷரிஸ் அஹ்மத், ப்ரெட் க்ளாசென், போல் வென் மீக்கெரென்.

ஸிம்பாப்வே: க்ரெய்க் ஏர்வின் (தலைவர்), ரெஜிஸ் சக்கப்வா, வெஸ்லி மெதேவியர், சோன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராஸா, மில்டன் ஷும்பா, ரெயான் பியூரி, லூக் ஜொங்வே, ரிச்சர்ட் இங்கராவா, டெண்டாய் சட்டாரா, ப்லெசிங் முஸராபனி.

Post a Comment

0 Comments