Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஏலியன்கள் இருக்கிறார்களா, இல்லையா? - கண்டுபிடிக்க உதவும் ஃபார்முலா

வேற்றுகிரகவாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் ஏலியன் படங்களைப் பார்க்கும்போதோ கதைகளைப் படிக்கும்போதோ எழுவதுண்டு. தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் 1963ஆம் வெளியான விண்வெளி குறித்த முதல் தமிழ் படம் கலை அரசி. எவ்வளவு காலமாக ஏலியன்கள் பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் கற்பனைகளும் இருந்து வருகின்றன என்பதற்கு அதுவே சாட்சி.

அது சரி ஏலியன்கள் இருக்கிறார்களா, இல்லையா?

இதற்கு எஸ்.ஜே.சூர்யா ஸ்டைலில் தான் பதில் சொல்ல வேண்டும். “இருக்காங்க, ஆனா இல்ல...”

ஆம், ஏலியன் விஷயமும் அப்படிக் கொஞ்சம் குழப்பமானது தான். சமீபத்தில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலமாக 1,150 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் வாஸ்ப்-96பி (WASP-96B) என்ற புறக்கோளில் நீராவி இருப்பதற்கான தடயத்தைக் கண்டுபிடித்தார்கள்.

நீராவி இருக்கிறது என்றால் அங்கு உயிர் வாழும் சூழல் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அப்படி உயிர் வாழும் சூழல் இருந்தால் அதில் உயிர்கள் வாழ்கின்றனவா என்று இன்னொரு கேள்வியும் எழுகிறது.

அதற்குள் செல்வதற்கு முன்பாக, நாம் ஒரு கோளில் எப்படி உயிர்கள் வாழ்வதற்கான சூழல் ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.



சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள்

சூரியன் ஒரு நட்சத்திரம். அதை 8 கோள்கள் சுற்றி வருகின்றன. அதில் மூன்றாவதாகச் சுற்றி வரும் பூமியில் மட்டுமே நமக்குத் தெரிந்து இதுவரை உயிர்கள் வாழ்கின்றன.

நம்முடைய பால்வெளி மண்டலத்தில் மட்டும் சுமார் 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன. பால்வெளி மண்டலத்தைப் போலவே 20,000 கோடி கேலக்சிகள் நம் பார்வைக்கு உட்பட்டுள்ள பிரபஞ்சத்தில் இருப்பதாக மதிப்பிட்டுள்ளார்கள்.

இந்த நட்சத்திரங்களைச் சுற்றி நம்முடைய சூரிய மண்டலத்திலுள்ள கோள்களைப் போலவே பல்வேறு கோள்கள் சுற்றுகின்றன. சூரியனைத் தவிர மற்ற நட்சத்திரங்களைச் சுற்றும் கோள்களைத்தான் நாம் புறக்கோள்கள் என்று கூறுகிறோம்.

இதுவரைக்கும் நாம் இதுபோன்ற சுமார் 8,000 புறக்கோள்களை அடையாளம் கண்டுள்ளோம். ஆனால், இன்னும் கோடிக்கணக்கான கோள்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கின்றன.

இயற்கை வேதிம வினைகளின் விளைவாக உருவானது தானே உயிர். ஆகவே, இந்தக் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் வெறும் பூமியில் மட்டும் தான் உயிர் உருவாகியிருக்கும் என்று நினைப்பதை ஒருவித அகங்காரம் என்றுதான் சொல்லவேண்டும். உயிர்கள் வாழக்கூடிய இன்னும் பல கோள்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கலாம், இருக்கும்.



உயிர்கள் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள்:

அனைத்து கோள்களிலுமே உயிர்கள் தோன்ற முடியாது. நட்சத்திரத்திற்கு மிகவும் அருகில் இருந்தால் அதீத வெப்பத்தால் கதிரியக்கம் கூடுதலாக இருக்கும். இதற்கான சான்றாக நம் சூரிய மண்டலத்தில் இருக்கும் புதன் கோளைச் சொல்லலாம். அது சூரியனுக்கு மிக அருகில் 5.8 கோடி கிமீ தொலைவில் இருப்பதால் அதீத வெப்பத்தோடும் கதிரியக்கம் மிக்கதாகவும் இருக்கிறது. ஆகவே அதில் உயிர்கள் தோன்ற முடியவில்லை.

அதேபோல், நட்சத்திரத்திடம் இருந்து வெகுதூரத்தில் இருந்தாலும் தேவையான ஆற்றல் கிடைக்காது. இதற்கு சான்றாக சூரிய மண்டலத்தின் இறுதியில் இருக்கும் நெப்டியூனை சொல்லலாம். அது சூரியனில் இருந்து 4.5 பில்லியன் கி.மீ தொலைவில் இருப்பதால் சூரிய ஆற்றலே கிடைக்காமல் உறைந்த நிலையில் இருக்கிறது.

இந்த இரண்டு சூழலிலும் உயிர்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் இப்படியில்லாமல், சரியான தொலைவில் ஒரு கோள் அமைந்திருந்தால் அங்கு உயிர் தோன்றுவதற்கான வாய்பு ஏற்படும். இதற்கு பூமியை சான்றாகச் சொல்ல முடியும்.



உயிர்களின் இயக்கம் கோளின் வளிமண்டலத்தை மாற்றி அமைத்துவிடும். பூமி உருவாகும்போது அதன் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் இருக்கவில்லை. ஒளிச்சேர்க்கை மூலம் ஆற்றல் பெரும் உயிர்கள் உருவான பிறகு தான் வளிமண்டலத்தில் பெரும்பகுதி ஆக்சிஜன் உருவானது.

வேதியியல் விதிகளின்படி குறைந்த அளவே கார்பன்மோனாக்சைட் உள்ள வளிமண்டலத்தில் கணிசமான மீத்தேன் மற்றும் கார்பன் டையாக்சைட் போன்றவை தானாக உருவாக முடியாது.

எனவே, வேறொரு கோளில் குறைவான கார்பன் ஆக்சைட், ஆனால் கூடுதல் கார்பன் டையாக்சைட், கூடுதல் மீத்தேன் காணப்பட்டால் அதில் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்பு கூடுதலாக இருக்கும். அங்கு உயிர்கள் வாழ்வதாக அனுமானிக்கலாம்.

இத்தகைய பல வேதிம நிலைகள் உயிரி சுட்டிகள் (Biosignature) என்று அழைக்கப்படுகின்றன. புறக்கோள்களின் வளிமண்டலத்தை ஆய்வு செய்து அதில் இருக்கும் வேதிமப் பொருள்களை ஆய்வு செய்யும் முனைப்பு உருவாகி வருகிறது.



ஏலியன்களைக் கண்டுபிடிக்க உதவும் ஃபார்முலா:

உயிர்கள் தொடர்ந்து வாழ்வதற்கான பல்வேறு சரியான காரணிகளைக் கண்டுபிடித்து, தொகுத்து எவ்வளவு கோள்களில் உயிர் இருக்கும் என்பதைக் கணிப்பதற்கான ஒரு ஃபார்முலாவை 1961ஆம் ஆண்டில் டாக்டர் ஃபிராங்க் டிரேக் முன்வைத்தார்.

இதன் அடிப்படையில் பல கோடி கோள்களில் உயிர்கள் தோன்றலாம், வளரலாம்.

எனவே, நமது பூமியில் மட்டுமே உயிர்கள் தோன்றியுள்ளன என்பது ஏற்புடைய பார்வையில்லை.

சரி, அதான் ஏலியன்கள் இருப்பதற்காவ வாய்ப்புள்ளதே, பிறகு ஏன் எஸ்.ஜே.சூர்யாவை போல் குழப்ப வேண்டும்?



பறக்கும் தட்டுகள் உண்மையா?

இந்த இடத்தில் பலருக்கும் பிரபஞ்சத்தில் வேறு கோள்களில் உயிர் உள்ளது என்றால், பூமிக்கு வேற்றுகிரகவாசிகள் வந்துள்ளார்களா? பறக்கும் தட்டு மாதிரியான விஷயங்கள் உண்மையா என்ற கேள்வியும் எழலாம்.

நம்முடைய பொதுப்புத்தியில் ஏலியன் என்றால் பறக்கும் தட்டு மாதிரியான கற்பனைகள் வருவது இயல்பு. அப்படி வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்ததற்கான எந்தத் தடயமும் இதுவரை இல்லை.

ஒளியின் வேகத்தில் பயணித்தாலும்கூட, நமக்கு அருகில் இருக்கும் நட்சத்திர மண்டலமான 'பிராக்சிமா சென்டாரி'-க்கு போக நான்கு ஆண்டுகள் ஆகும். ஆக, பல நூறு ஆண்டுகள் பயணித்தால் மட்டும் தான் இந்த மாதிரியான நட்சத்திர மண்டலங்களுக்கு நடுவே பயணம் மேற்கொள்ள முடியும்.



அவ்வளவு காலம் பயணித்து வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்தார்கள் என்றால், சில நாட்கள் மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டுப் போய்விடுவார்களா?

மனிதர்கள் நிலவுக்குச் சென்றபோதே அங்கு ஒருநாள் தங்கி ஆய்வு செய்தார்கள். அப்படியிருக்கும் நட்சத்திரங்களுக்கு நடுவே பயணித்து இங்கு ஏலியன்கள் வந்தால் சில காலமாவது தங்கி இந்த பூமியைப் பற்றித் தெரிந்துகொள்ள, சில பத்தாண்டுகளுக்காவது தங்கி ஆய்வு செய்ய மாட்டார்களா?

ஆனால், பறக்கும் தட்டு போன்ற கதைகளில் வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து சில நொடிகள் அல்லது சில மணிநேரங்களில் திரும்பிவிடுகிறார்கள். இது நம்பும்படியாக இல்லை.

Post a Comment

0 Comments