Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கடும் கோவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து சீனாவில் தீவிரமடையும் போராட்டம்...!

 


போராட்டத்துக்காக மக்கள் திரண்ட நிலையில், ஷாங்காய் நகரில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்.

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு எதிராக பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு எதிராக சிலர் வெளிப்படையாகவே கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

ஷாங்காய் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் குவிந்தனர். அங்கே மக்கள் போலீஸ் வண்டிகளில் அவர்களை தூக்கிச் செல்வதை பிபிசி பார்த்தது.

பெய்ஜிங், நான்ஜிங் நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 பேர் உயிரிழந்ததை அடுத்து, கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. 

கடந்த வியாழன் அன்று அந்தக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கட்டடம் பகுதியளவு பூட்டப்பட்டிருந்ததால், உள்ளே இருந்தவர்கள் சரியான நேரத்தில் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு, 10 பேர் உயிரிழந்தனர். இந்த மரணங்களுக்கு கோவிட் கட்டுப்பாடுகள்தான் காரணம் என்று கூறப்படுவதை சீன அதிகாரிகள் மறுத்தார்கள். ஆனால், உரும்கியில் உள்ள அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக, இந்த மரணங்களுக்காக மன்னிப்புக் கோரினர். மேலும், கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதன் மூலம் "ஒழுங்கை மீட்டெடுப்பதாக" உறுதியளித்தனர்.

ஆனாலும், தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அரசின் அதீத கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும், அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு எதிராகவும் ஷாங்காய், உரும்கி உள்பட சீனாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதிகளுக்கு வந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

கட்டுப்பாடுகளை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர். சீனாவின் மிகப்பெரிய நகரமாகவும், உலகளாவிய நிதி மையமாகவும் உள்ள ஷாங்காயில் நடந்த போராட்டத்தில், சிலர் மெழுகுவர்த்தி ஏற்றியதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பூங்கொத்துகள் வைத்ததையும் காண முடிந்தது. மற்றவர்கள் "ஷி ஜின்பிங், பதவி விலகு" மற்றும் "கம்யூனிஸ்ட் கட்சி, பதவி விலகு" போன்ற முழக்கங்கள் எழுப்புவதைக் கேட்க முடிந்தது. இத்தகைய கோரிக்கைகள் சீனாவிற்குள் ஒலிப்பது ஒரு அசாதாரணக் காட்சியாகும். அங்கு அரசாங்கத்தையும் அதிபரையும் நேரடியாக விமர்சித்தால் கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும். போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர், மக்கள் தெருக்களில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் சற்று உற்சாகமாக உணர்ந்ததாகவும், சீனாவில் இவ்வளவு பெரிய அளவிலான எதிர்ப்பைக் கண்டது இதுவே முதல் முறை என்றும் பிபிசியிடம் கூறினார்.



நன்றி...
BBC-TAMIL

Post a Comment

0 Comments