இக்கட்டான காலகட்டங்களில் கடைபிடிக்க வேண்டிய இரண்டு வழிமுறைகளை இஸ்லாம் கற்றுத்தந்துள்ளது. அவற்றில் ஒன்று 'துஆ' எனும் பிரார்த்தனை. மற்றையது 'ஸதகா' எனும் தான தர்மம். இந்த இரு வழிமுறைகளையும் நாம் கைவிடாது மேற்கொள்ளும்போது, நிச்சயம் நம்முடைய தலைவிதிகள் யாவும் மாறும் என்பதில் ஐயமில்லை.
'துஆ' எனும் இறைஞ்சுதலை, கெஞ்சிக்கேட்பதை அல்லாஹ் மிகவும் விரும்புகிறான். நாம் அவனிடம் துஆ கேட்பது அவனுக்கு மிகவும் விருப்பமானதாகும். இது தொடர்பில் நபி (ஸல்) அவர்கள், 'யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவன் மீது அல்லாஹ் கோபப்படுகிறான்' எனக் கூறியுள்ளார்கள்.
அதனால் நாம் பிரார்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது குறித்து அல் குர்ஆன், 'உங்கள் இறைவன் கூறுகிறான், என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள், நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன். எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்' (40:60) என்று குறிப்பிட்டிருக்கின்றது.
இவ்வசனம், பிரார்த்தனை ஒரு வணக்கம். அதை விடுவது பெருமையடிக்கும் செயல். அதனால் நரகம் கிடைக்கக்கூடும். எனவே நாம் நமது பிரார்த்தனை விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக எடுத்தியம்புகிறது. ஆகவே தான் நபி (ஸல்) அவர்கள், 'பிரார்த்தனை, அது ஒரு வணக்கம்' என்று கூறினார்கள்.
அதாவது தொழுகை எப்படி ஒரு வணக்கமாக இருக்கிறதோ அதேபோன்று பிரார்த்தனை செய்வதும் ஒரு வணக்கம் தான். பிரார்த்தனை செய்யும் போது நாம் கேட்பது நிச்சயம் நமக்கு கிடைக்கப்பெறும் என்ற உறுதியான நம்பிக்கையுடன், மனம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்போது எமது பிரார்த்தனைக்கு பிரதிபலன் கிடைக்கப்பெறும். இல்லாவிடில் நமது அன்றாடப் பிரார்த்தனைகளில் எவ்விதப் பலனும் இருக்காது.
மேலும் தர்மம் மற்றொரு வழிமுறையாகும். இன்றைய காலகட்டத்தில் இதுவும் அதற்கேயுரிய ஒழுங்கில் முழுமையாக நிறைவேற்றப்படாதுள்ளன. இது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும். இதனால் தான் அல் குர்ஆன் செல்வங்களைக் குறித்து குறிப்பிடும் போதெல்லாம், 'நாம் கொடுத்ததிலிருந்து... 'என்று குறிப்பிட்டு கூறி இருக்கிறது.
'நீங்கள் நேசிக்கும் பொருட்கள்களில் இருந்து தானம் செய்யாதவரை நிச்சயமாக நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள். எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்'.
(அல் குர்ஆன் 3:92)
நாம் விரும்பியதை கொடுக்காதவரை நமக்கான நன்மைகளை நிச்சயம் நாம் பெற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிடும் இவ்வசனம் நமது அன்றாட தர்மம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றது. ஆனால் இன்றைய நிலை எவ்வாறு உள்ளது? ஒன்றுக்கும் உதவாத பொருட்கள் தான் தர்மம் என்ற பெயரில் அதிகம் வழங்கப்படுகிறது. இது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாததாகும்.
தான தர்மம் என்பது ஏதோ அடுத்தவர்களுக்கு அள்ளிக்கொடுப்பதும், தூக்கிக் கொடுப்பதும் அல்ல. அது அடுத்தவர்களையும் வாழவைப்பதை நோக்கமாகக் கொண்ட செயற்பாடாகும்.
எனவே நாம் வழங்கும் தர்மம் பயனுள்ளதாகவும், சிறப்பானதாகவும், உயரியதாகவும் இருக்க வேண்டும். நீங்கள் உங்களுக்கு எதை விரும்புவீர்களோ அதையே மற்றவர்களுக்கும் நீங்கள் விரும்புவதாக இருக்க வேண்டும். அதுவே உண்மையில் மிகச்சிறந்த தர்மமாகும். துஆவும், ஸதகாவும் அதாவது பிரார்த்தனையும், தர்மமும் மனிதனின் தலைவிதியைப் புரட்டிப்போடக்கூடியதாக உள்ளது. அதனால் அவ்விரண்டின் மகிமையை எம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடிகிறது. அதற்கேற்ப செயற்பட இன்றே ஆரம்பிப்போம்.
-அபூமதீஹா-
0 Comments