அல்குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட போது மக்காவில் உள்ள இறைமறுப்பாளர்கள் அக்குர்ஆனை மக்கள் செவியுற்று விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.
இது தொடர்பில் அல்லாஹ் தன் அருள்மறையில் 'இக்குர்ஆனைக் கேளாதீர்கள். நீங்கள் மிகைப்பதற்காக அதில் (குழப்புவதற்காக) வீணான காரியம் செய்யுங்கள் என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர் (அல் குர்ஆன் 41:26) என்று குறிப்பிட்டு வைத்திருக்கின்றான்.
அந்த வகையில் அபூபக்கர் (ரழி) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவமொன்று புஹாரியில் பதிவாகியுள்ளது.
அபூபக்ர் (ரழி) அவர்கள் மக்காவிலிருந்து வெளியேற எண்ணிய போது, இப்னு தஃகினா என்பவர் அவருக்கு அடைக்கலம் கொடுத்து, திரும்ப அழைத்து வந்தார். (குரைஷிகள்) இப்னு தஃகினாவை நோக்கி, அபூபக்கர், தமது இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வணங்கவோ, தொழவோ, தாம் விரும்பியதை ஓதவோ செய்யட்டும். ஆனால், இவற்றின் மூலம் எங்களுக்கு இடையூறு செய்யவோ இவற்றை பகிரங்கமாகச் செய்வதோ கூடாது.
ஏனெனில் எங்கள் மனைவி மக்கள் (புதிய மத நம்பிக்கை மற்றும் வணக்க வழிபாட்டு முறைகளைப் பார்த்து) குழப்பமடைந்து விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று அவரிடம் கூறிவிடுங்கள்' என்றார்கள். அவர்கள் கூறியதை இப்னு தஃகினா அபூபக்ர் (ரழி) அவர்களிடம் தெரிவித்தார்.
அதன்படி, அபூபக்கர் (ரழி) அவர்கள் தமது இல்லத்திற்குள் தம்முடைய இறைவனை வணங்கியும், தமது தொழுகையை பகிரங்கப்படுத்தாமலும் தமது வீட்டுக்கு வெளியில் (அல் குர்ஆன் வசனங்களை) ஓதாமலும் (அவர்கள் விதித்த நிபந்தனைப்படி) இருந்து வந்தார்கள்.
இந்நிலையில் அபூபக்கர் (ரழி) அவர்களுக்கு (மாற்று யோசனை) தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் அல் குர்ஆனை ஓதியும் வந்தார்கள். அப்போது, இறைமறுப்பாளர்களின் மனைவி, மக்கள் அபூபக்கர் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு (அவர்களை பார்ப்பதற்காக) அவர்கள் மீது முண்டியடித்து விழுந்தனர். அபூபக்கர் (ரழி) அவர்கள் குர்ஆன் ஓதும்போது தமது கண்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகமாக அழக்கூடியவராக இருந்தார்கள்.
இந்நடவடிக்கை (தங்களது இளகிய இதயம் படைத்த மனைவி மக்களை மதம் மாறச் செய்து விடுமோ என்ற அச்சம்) இறை மறுப்பாளர்களான குறைஷிகளை பீதிக்குள்ளாக்கியது. அதனால் அவர்கள் இப்னு தஃகினாவை வரவளைத்தனர். அவரும் குறைஷிகளிடம் வந்தார். அப்போது அவர்கள், அபூபக்கர் தமது இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வழிப்பட்டுக் கொள்ளட்டும் என்று (நிபந்தனையிட்டு) அவருக்கு நீங்கள் அடைக்கலம் தந்ததன் பேரிலேயே நாங்கள் அவருக்கு அடைக்கலம் கொடுத்தோம். அவர் அதை மீறி, தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அந்த இடத்தில் பகிரங்கமாகத் தொழுதுகொண்டும், (குர்ஆனை) ஓதிக் கொண்டும் இருக்கிறார். நாங்கள் எங்கள் மனைவி மக்கள் குழப்பத்திற்குள்ளாகி விடுவார்களோ என்று அஞ்சுகிறோம். எனவே அபூபக்ரைத் தடுத்து வையுங்கள் என்றனர்.
அவர் அவரது இறைவனை தமது இல்லத்தில் வணங்குவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ள விரும்பினால் அவ்வாறு செய்யட்டும். அவர் அதை மறுத்து பகிரங்கப்படுத்தவே செய்வேன் என்றால் அவரிடம் உமது (அடைக்கலப்) பொறுப்பைத் திரும்பத் தருமாறு கேளுங்கள். ஏனெனில், (உங்களது உடன்பாட்டை முறித்து) உங்களுக்கு நாங்கள் மோசடி செய்வதை வெறுக்கிறோம். (அதே சமயம்) அபூபக்கர் (அவற்றை) பகிரங்கமாகச் செய்ய நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம் என்றும் கூறினர்.
இப்னு தஃகினா அபூபக்கர் அவர்களிடம் வந்து, நான் எதன் பேரில் உங்களிடம் ஒப்பந்தம் செய்தேன் என்பதை தாங்கள் அறிவீர்கள். ஆகவே ஒன்று, அதனோடு மட்டும் நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது எனது (அடைக்கலப்) பொறுப்பை என்னிடம் திரும்பத் தந்து விடவேண்டும்.
ஏனென்றால் நான் உடன்படிக்கை செய்து கொண்ட ஒரு மனிதரின் விஷயத்தில் நான் ஏமாற்றப்பட்டேன் என்று அரபுகள் கேள்விப்படுவதை நான் விரும்ப மாட்டேன்’’ என்று கூறினார். அதற்கு அபூபக்கர் (ரழி) அவர்கள், உமது அடைக்கலத்தை உம்மிடமே திரும்பத் தந்து விடுகிறேன். அல்லாஹ்வின் அடைக்கலம் குறித்து நான் திருப்திப்படுகிறேன்’ என்று கூறினார்கள்.
(ஆதாரம்: புஹாரி)
இச்சம்பவம் அல் குர்ஆனின் சக்தியும் ஆற்றல்களும் எத்தகையது என்பதை ஆரம்ப கால மக்களே அறிந்திருந்தனர் என்பதை எடுத்துக்காட்டக்கூடியதாக உள்ளது. அதனால் அக்குர்ஆனின் மூலம் உச்ச பலன்களை அடைந்திட முயற்சிப்போம்.
பிந்த் இஸ்மாயீல்'
0 Comments