Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இறையருள் நிறைந்த ரமழான்...!


பாவத்தின் சிறகுகள் உடைக்கப்பட்டு, நன்மையின் சிறகுகள் விரிக்கப்பட்டு, மனிதனை அநியாயத்தின் பக்கமும், அழிச்சாட்டியத்தின் பக்கமும் அழைத்துச் செல்கின்ற சைத்தான்கள் எல்லாம் விலங்கிலிடப்பட்டு, ஆன்மீக நறுமணம் வீசச் செய்யும் புனித ரமழான் இன்னும் சொற்ப நாட்களில் எம்மை வந்து சேர இருக்கின்றது இன்ஷா அல்லாஹ்.

முஸ்லிம் உலகில் ஒரு மாபெரும் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் இப்புனித மாதம் எங்களால் எப்படி பார்க்கப்படுகின்றது? இதன் மாண்புகளும் கீர்த்தியும், இது சுமந்து வருகின்ற அருட்பாக்கியங்களும் எங்களால் முறையாக புரியப்பட்டிருக்கின்றதா? அல்லது வழமை போன்று எல்லோருடனும் சேர்ந்து ரமழான் மாதத்தினுள் பிரவேசித்து 29 அல்லது 30 நாட்களை கழித்து விட்டு வெளியேறப் போகின்றோமா? என்பது போன்ற கேள்விகள் எங்களை நோக்கி கேட்பது இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. காரணம், வாழ்க்கையில் பல ரமழான்களை சந்தித்து பல நூறு நோன்புகளை நோற்றிருந்தாலும் ரமழானின் ஊடாக நாம் அடைய வேண்டிய அடைவுகளையும் மாற்றங்களையும் பெற்றுக் கொண்டோமா என்ற நியாயமான கேள்விக்கு திருப்திகரமான பதிலை யாரிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாது என்பதுதான் உண்மை.

இப்புனித ரமழான் மாதத்தின் வருகையை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருப்பதும், அது தன்னை அடைந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையை வெளிப்படுத்துவதும் நபி வழியாகும். ரமழான் மாதம் வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'யா அல்லாஹ் எங்களுக்கு ரஜப், ஷைபான் மாதங்களில் பரக்கத் செய்வாயாக, ரமழான் மாதத்தை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை தந்தருள்வாயாக என்று பிரார்த்தனை செய்வார்கள்'.
(ஆதாரம் - அல்-பைஹகி)

மேலும் ரமழான் மாதத்திற்கு முன்னைய மாதமாகிய ஷஃபான் மாதத்தின் தலைப்பிறையை நபி (ஸல்) அவர்கள் மிக உன்னிப்பாக தேடுவார்கள். ரமழான் மாதத்தின் தலைப்பிறையை முறையாக அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அன்னார் அவ்வாறு தேடலானார்கள்.பதினோரு மாத காலமாகப் பிரிந்திருந்த இடைவெளியின் பின்பு தரிசனம் தரும் நெஞ்சம் கவர்ந்த கௌரவமான ஒரு அதிதியின் விஜயம் போன்றுதான் அதன் வருகையை நபி (ஸல்) அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்திருக்கிறார்கள்.

இத்தீராத வேட்க்கையின் பின்புலத்தில் மறைந்திருக்கும் தாற்பரியமும், தத்துவமும் என்ன என்பதனை ரமழானின் சிறப்புகளை அறிந்து கொண்ட ஒவ்வொரு மனிதனும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

ரமழான் புனித அல் குர்ஆன் அருளப்பட்ட மாதம், பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்ற மாதம், சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்ற மாதம், நரக விடுதலையை பெற்றுத் தருகின்ற மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறந்த அருள்மிகு லைலத்துல் கத்ரை தன்னகத்தே கொண்ட மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படுகின்ற மாதம், முஸ்லிம் சமூகத்திற்கு பல்வேறு வகையான வெற்றிகளை கொண்டு வந்த மாதம், குறிப்பாக அற்ப ஆசைகளாலும் கீழ்த்தரமான எண்ணங்களாலும் பொய்யான மாயைகளாலும் நிறைந்து போயிருக்கின்ற மனித உள்ளங்களுக்கு நோன்பு என்னும் இறை கடிவாளமிட்டு புத்துயிர் பெறச் செய்யும் உன்னதமான பயிற்சிக்காலமே ரமழான் ஆகும்.



இமாம் ஹசனுல் பிஸ்றி (ரஹ்) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றார்: 'மூர்க்கத்தனமான மிருகம் கடிவாளம் இன்றி விடப்படுவதை விட மனித ஆசைகள் கடிவாளமின்றி விடப்படுவது ஆபத்தானது. எனவே, அடங்காத மிருகத்தையும் விட மனித ஆசைகளுக்கே கடிவாளம் மிகவும் அவசியமாகிறது' (ஆதாரம் - தப்சீறு ஹசநுல் பிஸ்றி).

மோசமான பண்புகளாலும் அசுத்தமான எண்ணங்களாலும் ஆளப்படுகின்ற மனிதன், நோன்பு என்னும் தெய்வீகக் கடிவாளமிடப்பட்டு நெறிப்படுத்தப்படும் போது ஆத்மார்த்தமான அமைதியையும் இன்பத்தையும் அடைந்து கொள்கிறான். அவனது வாழ்வில் ஆன்மீக மலர்ச்சியும், தெய்வீக ஆசிர்வாதங்களும் திண்ணமாகி விடுகின்றன. மாற்றமாக அவன் கடிவாளம் இன்றி விடப்பட்டால் இக்கொடிய பண்புகளும் எண்ணங்களுமே அவனது வாழ்வின் மொத்த அழிவிற்கும் அடித்தளமாகிவிடும். எனவே இவ்வுயர்ந்த பாக்கியங்களோடும், வரப்பிரசாதங்களோடும் எம்மை நோக்கி வருகின்ற ரமழானை நாம் சாதாரணமாக எதிர்கொள்ள முடியாது. அதற்கான முழுமையான ஒரு திட்டமிடலும், தயார்நிலையும் இன்றியமையாத ஒரு அம்சமாக பார்க்கப்படுகின்றது. அதை வெளிப்படுத்தும் முகமாகவே நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே அதற்காக தன்னை தயார் செய்து கொண்டார்கள். அதனுள் நுழைந்து 30 நாட்களை கழித்து விட்டு வெளியில் வருகின்ற ஒரு மனிதன் மாற்றங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். புதிய நடத்தைகளையும் புதிய மனப்பாங்குகளையும் வளர்த்துக் கொண்டவனாக இருக்க வேண்டும்.

இவ்வாறான மாற்றங்களை சந்திப்பதற்கான எல்லா காரணிகளையும் கொண்டதாக ரமழான் அமைந்திருக்கின்றது. இதனை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள், 'ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் எந்த ஒரு வாசலும் மூடப்பட மாட்டாது. நரகத்தின் வாசல்கள் மூடப்படும். அதில் எந்த ஒரு வாசலும் திறக்கப்பட மாட்டாது. சைத்தான்களும் கட்டுக்கடங்காத ஜின்களும் விலங்கிடப்படுகின்றன. மேலும் நன்மை செய்ய நாடுபவனே முன்னோக்கி வா, தீமை செய்ய நாடுபவனே தூரமாகி விடுவாயாக என்பதாக ஒரு அழைப்பாளர் அழைப்பு விடுப்பார். ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ் நரகிலிருந்து விடுதலை வழங்கிக் கொண்டே இருப்பான். (ஆதாரம் - திர்மிதி)

இவ்வாறு ரமழான் மாற்றத்திற்கான காரணிகளைக் கொண்டிருந்தாலும் வெறுமனே பசித்தும் தாகித்தும் இருந்து, இன்னும் சில அமல்களையும் செய்து விடுவதனால் மாத்திரம் மாற்றங்களை அடைந்து கொள்ள முடியாது. மாறாக ரமழானின் ஊடாக நாம் அடைய விரும்பும் மாற்றங்களை இலக்குகளாக கொண்ட செயல்திட்டம் ஒன்றினை வகுத்து, ரமழான் காலங்களில் அதனை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவே நாம் விரும்புகின்ற மாற்றங்களை அடைந்து கொள்ளலாம்.

ஆகவே ரமழானை மாற்றத்திற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்துவதற்குரிய வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டு இலக்குகளுடன் கூடிய செயல் திட்டத்தின் ஊடாக நாம் விரும்புகின்ற மாற்றங்களையும், ரமழான் சுமந்து வருகின்ற அனைத்து வகையான ஈருலக நன்மைகளையும் பெற்றுக் கொள்வதற்கு எம் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரியட்டும்.

கலாநிதி அல் ஹாபிழ் எம்.ஐ.எம். சித்தீக்...
(அல் – ஈன்ஆமி)
B.A.Hons(Al- Azhar university, Egypt)
M.A.& PhD (International Islamic university, Malaysia)

Post a Comment

0 Comments