நோன்பு வெறுமனே பசித்திருப்பது மாத்திரமல்ல ஒரு மனிதன் தனது ஐம்புலங்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே நோன்பின் பிரதான கோட்பாடாகும். இதனை அல்லாஹ் தனது அருள் மறையாம் அல் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான். 'உங்களின் முன்னோருக்கு விதியாக்கப்பட்டதை போன்று உங்களுக்கும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது'.
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாக சல்மான் (ரழி) அவர்கள் கூறியுள்ளதாவது, ஸஃபான் மாதம் இறுதியில் ஒர் நல் உபதேசம் செய்தார்கள். மனிதர்களே... உங்களிடம் ஓர் மகத்தான மாதம் வருகிறது. அது பரக்கத் பொருந்திய மாதமாகும். அதில் லைலதுல் கத்ர் என்ற ஓர் இரவு இருக்கிறது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாகும். ரமழானில் நோன்பு நோற்பதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். அதனுடைய இரவு நேரங்களில் நின்று வணங்குவதை நன்மைக்குரிய செயலாக ஆக்கியுள்ளான்.
எந்த மனிதன் இம்மாதத்தில் ஒரு நற்செயலைச் செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறாரோ அவர் ரமழான் அல்லாத மற்ற மாதங்களில் ஒரு பர்ளை நிறைவேற்றியவர் போலாவார். மேலும் இம்மாதத்தில் ஒரு பர்ளை நிறைவேற்றியவர் ரமழான் அல்லாத மாதங்களில் எழுபது பர்ளை நிறைவேற்றியவர் போன்றாவார். இம்மாதம் பொறுமையின் மாதமாகும். பொறுமையின் பிரதிபலன் சொர்க்கமாகும்.
எனவே நாம் நோன்பு நோற்று இறைவணக்கங்களில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் நோன்பின் பலாபலன்களை எம்மால் அடைந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். நல்லதை பேசி நல்லதை செய்து இதர மனிதர்களுடன் சுமுகமாகவும், சுகதுக்கங்களில் பங்கு கொள்வதோடு அல்லாஹ் அருளியவற்றில் இருந்து ஏனையோருக்கு வழங்கவும் வேண்டும்.
எந்த மனிதரேனும் ஒர் நோன்பாளியை நோன்பு துறக்கச் செய்கிறாரோ அவருடைய அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. நரக நெருப்பிலிருந்து அவர் விடுதலை பெறக் காரணமாகிறது. இது மாத்திரமன்றி நோன்பு நோற்றவரைப் போன்று நன்மையும்
கிடைத்துவிடுகிறது. எனினும் நோன்பாளியுடைய நன்மையிலிருந்து எதுவும் குறைக்கப்பட மாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, ஸஹாபாக்கள் யாரசூலுல்லாஹ் எங்களில் நோன்பாளிகளை நோன்பு துறக்க வைக்க சக்தி பெற்றவர்கள் இல்லையே... என்ற போது நபி (ஸல்) அவர்கள், வயிறு நிறைய உணவளிக்க வேண்டியதில்லை. மாறாக ஒரு பேரீச்சம் பழம் அல்லது ஒரு மிடர் தண்ணீர்
அல்லது ஒரு மிடர் பால் இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு நோன்பு துறக்கச் செய்தாலும் அவருக்கு அல்லாஹ் அந்த நன்மையை வழங்கி விடுகிறான். அதனைத் தொடர்ந்து இம்மாதத்தில் முதற் பகுதி ரஹ்மத்துடையதாகவும் நடுப்பகுதி பாவமன்னிப்புக்குரியதாகவும் இறுதிப் பகுதி நரக நெருப்பை விட்டும் விடுதலை பெறுவதற்குரியதாகவும் இருக்கிறது என்றார்கள்.
எவரேனும் இம்மாதத்தில் தன் அடிமைகள், வேலைக்காரர்களின் வேலைப் பளுவை குறைப்பாரோ அவரை அல்லாஹ் மன்னித்து நரக விடுதலையும் அளித்து விடுவான் எனவும் அன்னார் கூறியுள்ளார்கள். எனவேதான் ரமழான் மாதத்திற்கு முன்னரே ஸஃபான் மாத இறுதியிலேயே நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தின் நோன்பைப் பற்றிக் கூறினார்கள்.
எனவே நாமும் நோன்பு மாதத்தின் ஒர் வினாடியேனும் வீணாகக் கழிக்காது வீண் பேச்சுக்கள், வீண் விளையாட்டுக்களை விட்டும் விலகி ஐங்காலத் தொழுகைகளை இமாம் ஜமாத்துடன் தொழுது இதர சுன்னத்தான தொழுகைகளில் ஈடுபட்டு திக்ர், ஸலவாத், இஸ்திஃக்பார், அல் குர்ஆன் திலாவத் போன்ற இன்னோரன்ன நல்லமல்களில் ஈடுபட்டு வருவதுடன் நோன்பின் மாண்பைப் பேணி இரட்டிப்பு நன்மைகளைப் பெறுவோம்.
-எம்.ஏ.எம். ஹஸனார்-
0 Comments