Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இஸ்லாத்தில் மதச் சுதந்திரம்...!


நிலைபேறான மகிழ்ச்சியும் கௌரவமும் நிறைந்த ஒரு சமூக உருவாக்கத்திற்கான மிகப்பிரதான அடிப்படைகளில் ஒன்றாக மதச் சுதந்திரம் காணப்படுகிறது. அதனால்தான் இஸ்லாம் மதச்சுதந்திரம் சம்பந்தமான அதனது ஆழ்ந்த அவதானிப்பையும் வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது. இதனை அல்குர்ஆன் இவ்வாறு பிரஸ்தாபிக்கின்றது.'

(சத்திய இஸ்லாம்) மார்க்கத்தில் எத்தகைய நிர்ப்பந்தமும் இல்லை. (ஏனெனில்) வழிகேட்டிலிருந்து நேர்வழி திட்டமாக தெளிவாகிவிட்டது.' (சூறா: பகரா – 256)

இது அல்குர்ஆனின் மதச்சுதந்திரப் பிரகடனமாகும். நபி (ஸல்) அவர்களை சந்திப்பதற்கு கிறிஸ்தவர்களாக இருந்த நஜ்ரான் தூதுக்குழு ஒன்று வந்த போது அவர்களை மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் வைத்தே உபசரித்ததோடு அவர்களின் வணக்கங்களை மஸ்ஜிதின் ஒரு புறத்தில் நிறைவேற்றவும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். (ஆதாரம்: ஸீரது இப்னு இஸ்ஹாக)

மதீனா சாசனத்தில் ஒவ்வொரு மதத்தை சார்ந்தவர்களும் தத்தமது மதக் கடமைகளையும் அனுஷ்டானங்களையும் பூரணமாக நிறைவேற்றுவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இது இஸ்லாத்தின் மதச் சுதந்திரம் பற்றிய விசாலமான பார்வையை பறைசாற்றுகிறது. மதச் சுதந்திரம் பற்றி அதில் குறிப்பிடப்பட்ட முக்கியமான சில அடிப்படைகள் பின்வருமாறு காணப்படுகிறது.

* முஸ்லிமல்லாதோர் அவர்களது மார்க்கத்தையும் செல்வங்களையும் பாதுகாத்துக்கொள்ள உரிமை உடையவர்கள். அவர்கள் முஸ்லிம்களது மார்க்கத்தை பின்பற்ற வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்பட மாட்டார்கள். அத்துடன் அவர்களது செல்வங்கள் சூரையாடப்படவும் மாட்டாது.

* நாட்டுக்குள்ளும் வெளியேயும் நடமாடுவதற்கான சுதந்திரம் நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்ப உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நஜ்றான் தேச கிறிஸ்தவர்களோடு நபி (ஸல்) அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் மத சுதந்திரத்துக்கான வாசல் முழுமையாக திறக்கப்பட்டிருந்தது. அவ்வொப்பந்தத்தில் மதச்சுதந்திரம் சம்பந்தமாக பின்வரும் விடயங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

'நஜ்ரான் வாசிகளும் அவர்களைச் சேர்ந்தோரும் அல்லாஹ்வின் பாதுகாப்பிலும், அவனது நபியும் ரசூலுமாகிய முஹம்மதுடைய (ஸல்) பொறுப்பிலும் இருப்பார்கள். அவர்களின் உயிர், சமயம், நிலம், உடமைகள் உட்பட அவர்களில் (இங்கு) இருப்பவர்கள், இல்லாதவர்கள் அடங்கலாக அவர்களின் வணக்கஸ்தலங்கள்,வழிபாடுகள் ஆகிய அனைத்திற்கும் அவர்களுக்கும் பாதுகாப்பும், பொறுப்புமுண்டு. மேலும் எந்தவொரு மத குருவும் அல்லது துறவியும் அவரது நிலையில் இருந்து நீக்கப்பட மாட்டார். 

அவ்வாறே எந்தவொரு மதக்கடமையை நிறைவேற்றுபவரும் அக்கடமையை நிறைவேற்றுவதில் இருந்து தடுக்கப்பட மாட்டார். சட்டபூர்வமாக அவர்களின் கைகளிலுள்ள சிறிய, பெரிய அனைத்தும் அவர்களுக்கே சொந்தம். அது வட்டியுடனும் ஜாஹிலிய்யக்கால பழிக்குப்பழி வாங்கும் தண்டனையுடனும் தொடர்பற்றதாக இருத்தல் வேண்டும். ஒருவர் இவர்களிடமிருந்து ஓர் உரிமையைக் கோரினால் இரு தரப்பினருக்கும் எத்தகைய பாதிப்பும் ஏற்படாதவண்ணம் நீதியான முறையில் அது தீர்த்து வைக்கப்பட வேண்டும்'.

(ஆதாரம்: இப்னு ஸஅத், அல்- தபகத்துல் குப்றா)

மதச் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் தெளிவான நிலைப்பாட்டை விளங்கப்படுத்தும் மற்றுமொரு குர்ஆனிய வசனம்,

'மேலும் உம் இறைவன் நாடியிருந்தால் பூமியிலுள்ள யாவரும் ஈமான் கொண்டிருப்பார்கள், எனவே மனிதர்கள் அனைவரும் முஃமின்களாக ஆகிவிட வேண்டும் என்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா,' (.சூறா: யூனுஸ் - 99) என்று குறிப்பிட்டிருக்கிறது.

சகல மதங்களுக்கும், சமூகங்களுக்கும் வாழ்வுரிமை உண்டு 'நபி (ஸல்) அவர்கள் நன்மாராயம் கூறுபவரும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவருமாவார்'. ஆகவே முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தினரது கடமை நபிவழி நின்று இஸ்லாத்தை வாழச் செய்வதும் பிற மனிதர்களைச் சென்றடையச் செய்வதுமேயன்றி அவர்கள் மீது திணித்து முஸ்லிம்களாக மாற்றுவதன்று. இந்த உண்மையை அங்கீகரிக்காமல் ஒருபோதும் மத சகிப்புத்தன்மை வராது. சகிப்புத்தன்மை இன்றேல் நட்புறவு நிலை பெறாது.

இஸ்லாத்தின் மொத்த செய்தியும் இதுதான். இந்த உலகம் என்பது ஒரு சோதனைக் களம். நிரந்தரமான மறு உலகில் சுவர்க்கத்தை அல்லது நரகத்தை தேர்ந்தெடுக்கும் ஒருகளம்.

இறைத்தூதர்கள் சுவர்க்கத்தைப் பற்றி சுபசெய்தி சொல்லவும், சுவர்க்கத்தின் பக்கம் மனிதர்களை அழைத்துச் செல்லக்கூடிய செயற்கரிய செயல்களின் பக்கம் வழிகாட்டவும், நரகத்தைப் பற்றி எச்சரிக்கவும், நரகத்தின் பால் மனிதர்களை அழைத்துச் செல்லக்கூடிய செயல்களில் இருந்து பாதுகாக்கவுமே அனுப்பப்பட்டார்கள். அவர்கள் வலுக்கட்டாயமாக நேரிய வழியில் மக்களை வற்புறுத்தி அழைப்பதற்காக அனுப்பப்படவில்லை.

முஸ்லிம்களின் கடமையும் இதுதான். அவர்கள் இவ்வுலக மாந்தருக்கு இஸ்லாத்தின் செய்தியை முன்மாதிரியான அழகிய நடத்தைகளைக் கொண்டும், கனிவான வார்த்தைகளைக் கொண்டும் எத்திவைக்க வேண்டும். அவர்கள் எதையும் மிகைப்படுத்தி சொல்வதையோ, கட்டாயப்படுத்தி திணிப்பதையோ இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்றது.

மேலும் மறுமையில் நமக்கு கிடைக்கும் வெற்றி அல்லது தோல்வி என்பது இம்மையில் நம்மிடம் இருக்கும் இறை நம்பிக்கையைப் பொறுத்ததாகும். இறைநம்பிக்கை இல்லாவிட்டால் நற்செயல்கள் வீணே. இறைநம்பிக்கை என்பது மனிதனோடு சம்பந்தப்பட்டது. அதனை யாரும் கொண்டுவந்து திணிக்க முடியாது என்பது தான் இஸ்லாத்தின் உறுதியான நிலைப்பாடாகும்.

மேற்குறித்த மதச் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு மிகத் தெளிவானது. இஸ்லாம் மாற்று மதங்களையோ, பிற சமூகத்தவர்களின் நம்பிக்கை கோட்பாடுகளையோ, கலாசார நடைமுறைகளையோ ஒருபோதும் நிந்தித்ததோ, இழிவுபடுத்தியதோ இல்லை. இவ்வாறு செய்பவர்கள் இஸ்லாத்தின் வழிகாட்டல்களையும் வரையறைகளையும் மீறியவர்களாகக் கணிக்கப்படுவார்கள்.

ஆனால் இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள் பற்றியும், மதச்சுதந்திரம் குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாடு பற்றியும் பிற சமூகத்தவர்களுக்கு சரியானதொரு தெளிவைக் கொடுக்க தவறியமை இஸ்லாம் குறித்து பிழையான புரிதல்களுக்கு வழிவகுத்துள்ளன. அதனால் எங்களையும் மறைத்துக்கொண்டு, எங்களது சன்மார்க்க விழுமியங்களையும் மறைத்துக் கொண்டு வாழும் மனோநிலையிலிருந்து நாம் முழுமையாக வெளிப்பட வேண்டும்.

இன்றைய சூழலில் மதச்சுதந்திரம் சம்பந்தமாக கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விடயங்களை தெளிவுபடுத்துவது காலத்தின் கட்டாயமாகும். அல்லாஹ்வின் வேதமே அதை நமக்கு கற்றுத் தருகிறது 'அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைப்பவற்றை நீங்கள் திட்டாதீர்கள். ஏனெனில் அவர்கள் அறியாமையால் வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள்' 
(சூறா: அல் அன்ஆம் - 18)

ஆகவே இஸ்லாம் அளித்துள்ள மத சுதந்திரத்தையும் ஏனைய சமூகங்களது மத உணர்வுகளுக்கு அளித்துள்ள மதிப்பையும் அறிந்து அதற்கேற்ப செயற்பாடுகளை அமைத்துக் கொள்வது ஒவ்வொரு இறைவிசுவாசியினதும் பொறுப்பாகும்.

கலாநிதி அல் ஹாபிழ்
எம்.ஐ.எம்.சித்தீக் (அல்–ஈன்ஆமி)
B.A.Hons, (Al- Azhar university,
Egypt) M.A.& PhD (International Islamic university, Malaysia)

Post a Comment

0 Comments