இஸ்லாத்தின் பிரதான கடமைகளில் ஒன்றே ஹஜ். அதனைப் பொருளாதார வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு தடவை நிறைவேற்றுவது கட்டாயமானது. அதனை வருடத்தில் குறிக்கப்பட்ட காலத்தில் ஒரு தடவை தான் நிறைவேற்ற முடியும்.
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, 'இரும்பில் உள்ள துருவை கொல்லனின் உலை நீக்குவது போன்று வறுமையையும் பாவங்களையும் ஹஜ்ஜும் உம்ராவும் நீக்கிவிடும்' என்றுள்ளார்கள்.
(ஆதாரம்-: நஸாயி)
மற்றொரு சந்தரப்பத்தில், 'அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கம் அல்லாமல் வேறில்லை' என்றும் அன்னார் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்:- புஹாரி)
இந்த நபிமொழிகள் ஹஜ்ஜின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் எடுத்துக்காட்டக்கூடியனவாக உள்ளன. அதனால் பொருளாதார வசதி உள்ள முஸ்லிம்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதோடு நபி (ஸல்) அவர்களின் ரௌழா சரீபையும் மதீனா சென்று தரிசிப்பதும் மிக முக்கியமானது.
'பணவசதி இருந்தும் ஹஜ்ஜை நிறைவேற்றாதவர்கள் யஹுதியாகவோ நஸாராகவோ மரணிக்கட்டும்' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
மற்றொரு தடவை நபி (ஸல்) அவர்கள், 'நான் காலமான பின்னர் ஹஜ்ஜை நிறைவேற்றிவிட்டு எனது ரௌழா சரீபைத் தரிசிப்பவர் நான் உயிருடன் இருக்கும் போது என்னைச் சந்தித்தவர் போலாவார்' என்று கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்களின் 'ரௌழா சரீபைத் தரிசிப்பது முஸ்லிமான ஆண் - பெண் இருபாலாருக்கும் ஸுன்னத்தாகும். இதனை 'ஸியாரத்துல் ரௌழத்துந்நபி' எனக் கூறப்படுகிறது.
அதேநேரம் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமில் நிறைவேற்றப்படும் ஒரு தொழுகை ஒரு இலட்சம் தொழுகைக்குச் சமமானது என்றும் மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவியில் நிறைவேற்றப்படும் ஒரு தொழுகை ஆயிரம் தொழுகைக்கு சமமானது என்றும் ஜெரூஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவில் நிறைவேற்றப்படும் ஒரு தொழுகை ஐநூறு தொழுகைக்குச் சமமானது என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்-: புஹாரி)
'எனது அடக்கஸ்தலத்தை தரிசிப்பவருக்கு எனது சபாஅத் உறுதியாகிவிட்டது' எனவும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதனால் ஹஜ் கடமையை நிறைவேற்றுபவர்கள் மதீனா சென்று நபி (ஸல்) அவர்களின் ரௌழா சரீபைத் தரிசிப்பதில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே அல்லாஹ்வின் கட்டளைக்கும் நபி (ஸல்) அவர்களின் போதனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஒவ்வொருவரும் அன்று பிறந்த பலகர் போலாவார் எனவும் ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அதனால் அந்தப் பாக்கியத்தை அடைந்து கொள்வதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வோம்.
ஏ.ஸீ.எம்.ஹனீபா...
மஸ்ஸல, பேருவளை
0 Comments