சுத்தம் சுகம் தரும் என்பது நாம் அறியாததல்ல. நபி (ஸல்) அவர்கள் ‘சுத்தம் -அது ஈமான் எனும் இறை நம்பிக்கையின் ஒரு பகுதி’ என்று எடுத்துரைத்தார்கள். மனிதன் கடைபிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகளில் தூய்மையும் ஒன்று.
என்றாலும் நாம் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்ட ஒன்றாக அது உள்ளது. அதனால் உணவு, உடை, உடல், இருப்பிடம் என யாவற்றிலும் நாம் தூய்மையைப் பேண வேண்டும்.
சுத்தம் என்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது. அதனால் இறை நம்பிக்கை என்பது வெறும் மனதளவிலான நம்பிக்கை மட்டுமல்ல. அது செயலளவிலானதும் கூட. அதனையே மேற்படி நபிமொழி எமக்கு எடுத்துக்காட்டுகிறது.
அதனால், நாம் சாப்பிட முன் கைகளைக் கழுவ வேண்டும், சாப்பிட்ட பின்பும் கைகளை கழுவி, வாய் கொப்பளிக்கவும் வேண்டும். தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும். தினமும் குளிக்க வேண்டும், மலம், சிறுநீர் கழித்த பின் அவ்வுறுப்புக்களையும், கைகளையும் நன்கு கழுவ வேண்டும். காலணி அணிய வேண்டும், வீட்டையும், வீட்டு வாசலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், உறங்கச் செல்ல முன்னர் படுக்கை விரிப்புக்களை உதறிக்கொள்ள வேண்டும். இவ்வாறு மனிதன் தன் அன்றாட வாழ்வில் தினமும் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து தூய்மை முறைகள் குறித்தும் இஸ்லாம் வலியுறுத்திக் கூறியுள்ளது. இவை அனைத்தும் திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில், “மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்”. (அல் குர்ஆன் 2:168) “நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்”.
(அல் குர்ஆன் 2:172)
“ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள். உண்ணுங்கள், பருகுங்கள், எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ், அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை”. (அல் குர்ஆன் 7:31)
“உம் ஆடைகளைத் தூய்மையாக்கி வைத்துக் கொள்வீராக. மேலும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக”.
(அல் குர்ஆன் 74:4,5)
“(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், நல்ல (மேலான) உணவையும் (ஆகாதவையென்று) தடுப்பவர் யார்?” என்று கேட்டு ‘அது இவ்வுலகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே! எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது’ என்றும் கூறுங்கள். அறியக்கூடிய மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்”.
(அல் குர்ஆன் 7:32)
“நம்பிக்கையாளர்களே…! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரையில் உங்கள் இரு பாதங்களையும் கழுவிக்கொள்ளுங்கள். அன்றி, (உங்கள் கையில் நீரைத் தொட்டு) உங்கள் தலையை தடவிக் கொள்ளுங்கள். நீங்கள் முழுக்குளிப்புடையவர்களாக இருந்தால் (கை, கால்களை மட்டும் கழுவினால் போதாது. உடல் முழுவதையும் கழுவி) தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கஷ்டத்தைத் தர அல்லாஹ் விரும்பவில்லை. எனினும், அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி வைக்கவுமே விரும்புகின்றான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக!”.
(அல் குர்ஆன் 5:6)
இவ்வாறு சுத்தம் பற்றி இஸ்லாம் மிக விரிவாக எடுத்தியம்பியுள்ளது. இருந்தும் கூட நாம் பல சந்தரப்பங்களில் தூய்மையைப் பேணாதவர்களாக இருக்கின்றோம். கவனக்குறைவாக நடந்து கொள்கிறோம். அதன் விளைவு நம்மை மட்டுமல்ல நம்மைச் சுற்றியிருப்பவர்களையும், நம் சந்ததியினரையும் பாதிக்கவே செய்கிறது. இது மறுக்க முடியாத உண்மையாகும்.
குறிப்பாக இன்றைய காலப்பகுதியில் இந்நாட்டில் டெங்கு வைரஸ் காய்ச்சல் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. அதற்கு வீட்டுச்சூழலையும் சுற்றாடலையும் சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திராததே அடிப்படைக் காரணமாகும்.
ஆனால் இஸ்லாம் எடுத்தியம்பியுள்ள படி, நாம் சுத்தத்தை உரிய ஒழுங்கில் பேணுவோமாயின் டெங்கு வைரஸ் ஒரு அச்சுறுத்தலாகவே இராது. ஆனால் அதில் ஏற்பட்டுள்ள பலவீனங்களின் விளைவாக இவ்வைரஸைக் காவிப்பரப்பும் நுளம்புகள் பல்கிப் பெருகுவதற்கு ஏற்ற வாய்ப்புக்கள் துரதிஷ்டவசமாக அதிகரித்துள்ளன. அதன் விளைவாகவே டெங்கு பெரும் சவாலாகியுள்ளது.
சுத்தம் பேணப்படுவதில் ஏற்பட்டுள்ள பலவீனங்களின் விளைவாக இந்நிலை ஏற்பட்டுள்ள போதிலும் இஸ்லாம் சுத்தத்திற்கு அளித்துள்ள முக்கியத்துவம் குறித்து நினைவூட்டப்படாத நிலைமை காணப்படவே செய்கிறது.
ஆகவே இஸ்லாம் சுத்தத்திற்கு அளித்துள்ள முக்கியத்துவம் குறித்து கொண்டு வாழ்வொழுங்கை அமைத்துக்கொள்வோம்.
அபூமதீஹா…
0 Comments