பஞ்சத்தின் விளிம்பில் இருக்கும் காசாவுக்கு உதவிகளை விநியோகிப்பதற்கான புதிய கடல் பாதை ஒன்றை ஏற்படுத்தும் முன்னோடித் திட்டம் ஒன்றாக, சைப்ரஸ் துறைமுகத்தில் இருந்து 200 தொன் உணவு பொருட்களை ஏற்றிய கப்பல் ஒன்று நேற்று (12) காசாவை நோக்கி புறப்பட்டது.
‘ஓபன் ஆர்ம்’ என்ற ஸ்பெயின் தொண்டு நிறுவனத்தின் இந்தக் கப்பல் அரிசி, மாவு மற்றும் உணவு பொருட்களை ஏற்றி சைப்ரசின் லர்னாகா துறைமுகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளது.
எனினும் இந்தக் கப்பல் காசாவில் எங்கு செல்லவுள்ளது என்பது பற்றிய திட்டம் வெளியிடப்படவில்லை.
இந்தத் திட்டத்திற்கு ஐக்கிய அரபு இராச்சியமே அதிக நிதி உதவி அளித்திருப்பதோடு அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உலக மத்திய சமையலறை என்று தொண்டு நிறுவனம் ஏற்பாடுகளை செய்திருப்பதோடு ஸ்பெயின் தொண்டு நிறுவனம் கப்பலை வழங்கியுள்ளது.
‘காசாவை நோக்கி தொடர்ந்து பயணிக்கும் மில்லியன் கணக்கான உணவுப்பொருட்கள் கொண்ட படகுகள் மற்றும் படகுகளுக்கான கடல்வழி பாதையை அமைப்பதே எங்கள் குறிக்கோளாகும்’ என்று மேற்படி அமெரிக்க தொண்டு நிறுவனத்தின் நிறுவனரான ஜோஸ் அன்ட்ரஸ் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எரின் கோர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் குறிப்பாக வடக்கு காசாவுக்கான உதவிப் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வரும் சூழலில் அங்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மக்கள் உயிரிழந்து வருகின்றனர். காசாவில் பஞ்சம் ஒன்று ஏற்படுவது பற்றி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உதவி அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.
இந்நிலையில் காசாவுக்கு கடல் வழியாக உதவிகளை கொண்டு செல்லும் மற்றொரு முயற்சியாக அமெரிக்கா காசா கடற்கரையில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
காசாவில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் அந்தப் பகுதியை வெளியுலகில் இருந்து இஸ்ரேல் முடக்கி இருக்கும் நிலையிலேயே அங்கு நேரடி உதவி விநியோகத்திற்கு தொண்டு நிறுவனங்கள் முயன்றுள்ளன.
காசாவில் துறைமுகக் கட்டமைப்பு ஒன்று இல்லாதபோதும், அழிக்கப்பட்ட கட்டடங்களின்; இடிபாடுகளை பயன்படுத்தி இறங்குதுறை ஒன்றை உருவாக்கவிருப்பதாக அந்தத் தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சைப்ரஸில் மேலும் 500 தொன் உதவிகள் திரட்டப்பட்டிருப்பதாகவும் அவைகளும் காசாவுக்கு அனுப்பப்படும் என்றும் அது குறிப்பிட்டது.
காசாவின் வட மேற்காக வெறுமனே 320 கிலோமீற்றர் தொலைவிலேயே சைப்ரஸ் உள்ளது.
இந்தத் திட்டம் வெற்றி அளித்தால், 2007 ஆம் ஆண்டு காசாவில் ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் இஸ்ரேல் அந்தப் பகுதி மீது கொண்டுவந்த கடல்வழி முற்றுகையை மீறும் முதல் சம்பவமாகவும் இது இருக்கும்.
உணவு இன்றி நோன்பு
காசாவில் போர் நிறுத்த முயற்சிகளில் இழுபறி நீடிக்கும் நிலையில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியிலேயே அங்குள்ள மக்கள் ரமழான் நோன்பை பிடித்து வருகின்றனர்.
காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் தெற்கு நகரான ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் பொதியில் அடைக்கப்பட்ட உணவு மற்றும் அவரை விதைகளைக் கொண்டு நோன்பு துறந்ததாக கான்யூனிஸில் இருந்து அங்கு இடம்பெயர்ந்து வந்த முஹமது அல் மஸ்ரி தெரிவித்தார்.
‘நாம் எதனையும் தயார் செய்யவில்லை. இடம்பெயர்ந்தவர்களிடம் என்ன இருக்கும்? மகிழ்ச்சியான ரமழானாக நாம் உணரவில்லை. மக்கள் குளிருக்கு மத்தியில் கூடாரங்களில் இருக்கிறார்கள்’ என்றார்.
‘இம்முறை ரமழான் இரத்தம் மற்றும் துன்பம், பிரிவு மற்றும் ஒடுக்குமுறையை சுவைக்கிறோம்’ என்று கான் யூனிஸில் இருந்து இடம்பெயர்ந்த மற்றுமொருவரான முஹமது அபூ மத்தர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
காசா நகரில் இடிந்த கட்டடங்களுக்கு மத்தியில் ஒரு குடும்பம் தனது தரைமட்டமாக்கப்பட்ட வீட்டில் கடந்த திங்கட்கிழமை முதலாவது நோன்பை துறந்தது.
‘இன்று ரமழானின் முதல் நாள். தாக்குதலில் இடிந்திருக்கும் எமது வீட்டின் இடிபாடுகளில் முதல் நோன்பை துறப்பதற்கு நாம் முடிவொடுத்தோம்’ என்று ஓம் ஷஹர் அல் கத்தா என்பவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டார்.
காசாவுக்கான உதவி விநியோகம் போருக்கு முன்னர் இருந்த நிலையில் இருந்து மிகக் குறைவடைந்துள்ளது. இந்நிலையில் சர்வதேச நாடுகள் காசாவுக்கு வானில் இருந்து உதவிகளை போடுவதற்கு ஆரம்பித்துள்ளன. எனினும் இந்த முறை பொருத்தமானதல்ல என்று உதவிப் பணியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேலிய இராணுவம் நேற்றும் உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது நடத்திய சரமாரித் தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசா நகரில் உள்ள குவைட் சந்தியில் உதவிப் பொருட்களை எதிர்பார்த்து ஒன்று கூடிய மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் 20 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
காசாவில் உதவிக்கு காத்திருப்பவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த பெப்ரவரி 29 ஆம் திகதி காசா நகரில் நபுல்சி சுற்றுவட்டப்பாதையில் உதவி லொறிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலிய படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காசாவில் கடந்த ஆறு மாதங்களால் இஸ்ரேல் இடைவிடாது நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்ந்தும் ஸ்தம்பித்து காணப்படுகிறது. போர் நிறுத்தம் தற்காலிகமானதாக இருக்க வேண்டும் என்பதோடு ஹமாஸை ஒழிக்கும் தமது திட்டம் முன்னெடுக்கப்படும் என்று இஸ்ரேல் கூறுகிறது. மறுபுறம் போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாடு ஒன்றின் அடிப்படையிலேயே தமது பிடியில் இருக்கும் எஞ்சிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸ் கூறுகிறது.
இஸ்ரேலில் ரொக்கெட் மழை
காசா போர் பிராந்தியம் எங்கும் பதற்றத்தை அதிகரித்திருக்கும் சூழலில் நேற்று லெபனானில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்று மீது நூறுக்கும் அதிகமான ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதில் முதல் தாக்குதலில் 70க்கும் அதிகமான ரொக்கெட்டுகள் விழுந்திருப்பதோடு தொடர்ந்து 30 க்கும் அதிகமான ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கிழக்கு லெபனானின் பால்பெக் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் நடத்திய ரொக்கெட் தாக்குதல்களில் குறைந்தது ஒரு லெபனான் சிவிலியன் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே இந்த ரொக்கெட் மழை விழுந்துள்ளது.
இந்தத் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றிருக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு, காசாவில் உள்ள பலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும் லெபனான் மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாகவுமே இது நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
மறுபுறம் வர்த்தகக் கப்பல்பாதையை தற்காப்பதற்கு எனக்கூறி அமெரிக்க மற்றும் பிரிட்டன் கூட்டணி மேற்கு யெமனில் உள்ள சிறு நகரங்கள் மற்றும் துறைமுக நகரங்கள் மீது கடந்த திங்கட்கிழமை நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக யெமனின் சர்வதேசம் அங்கீகரித்த அரசு குறிப்பிட்டுள்ளது.
பலஸ்தீனத்திற்கு ஆதரவாக யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments