Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஆசூரா நோன்பின் மகத்துவம்..!


இஸ்லாத்தில் நான்கு மாதங்கள் புனிதமானவையாகும். இதனை அல் குர்ஆனும் நபிமொழிகளும் எடுத்தியம்பியுள்ளன. அந்த வகையில் அல் குர்ஆன், ‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைக்கப்பட்ட நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவை. இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்’. (09:36)

அதேநேரம், நபி (ஸல் அவர்கள், ‘வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரெண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு புனிதமானவை. அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும். அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். 
(ஆதாரம்: புஹாரி)

அதனால் இஸ்லாம் விலக்கி, தடுத்துள்ள விடயங்களிலிருந்து முற்று முழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக புனித மாதங்களில் பேணுதலாக இருக்க வேண்டும். ஹரத்தின் எல்லைகளின் புனிதத்துவத்தை மீறி பாவம் செய்தால் எவ்வாறு பன்மடங்கு பாவம் கிடைக்குமோ அதே போன்று புனித மாதங்களில் பாவம் செய்வதால் பன்மடங்கு பாவங்கள் கிடைக்கப்பெறும். அதேபோன்று இம்மாதங்களில் நன்மை செய்வது பல மடங்கு நன்மைகளையும் ஈட்டித்தரும்.

உமர் (ரழி) அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். அதனடிப்படையில் பலரும் பல மாதங்களை குறிப்பிட்டார்கள். இறுதியில் முஸ்லிம்களின் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையும் வருடம் ஆரம்பிப்பதை நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நாளை அடிப்படையாக வைத்து என்றும் முடிவு செய்யப்பட்டது. அதற்கேற்பவே இஸ்லாத்தின் முதல் மாதமாக முஹர்ரம் விளங்குகிறது.

அல்லாஹ்தஆலா மூஸா (அலை) அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளனாகிய பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றியது இந்தப் புனித மாதத்தில் தான். இம்மாத்தில் ஏராளமான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் முஹர்ரம் மாதத்தின் ஆசூரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள். அதனால் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று அன்னார் வினவினார்கள். அதற்கு அவர்கள் ‘இது ஒரு புனிதமான நாள். இதில் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான்.

மேலும் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் அவன் கடலில் மூழ்கடித்தான். அதனால் மூஸா (அலை), அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்’ என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், மூஸாவை பின்பற்றுவதற்கு உங்களை விட நாமே தகுதியானவர்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள், ‘ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். 
(ஆதாரம்: முஸ்லிம்)

இந்த நபிமொழிகள் முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற நோன்புகளுக்கு பல நன்மைகள் உள்ளன என்பதனை எடுத்தியம்புகிறது.

இதனை ‘ரமழானுக்கு பின்னர் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பு’ என்ற வரிகள் தெளிவுபடுத்துகிறது. அதனால் வாராந்தம் நோற்கப்படக்கூடிய திங்கள், வியாழன் நோன்புகள், அதேபோன்று மாதாந்தம் நோற்கக்கூடிய 13, 14, 15 அய்யாமுல் பீழ் (வெள்ளை தினங்கள்), அதே போன்று அய்யாமுஸ்ஸூத் (கருப்புத்தினங்கள்) 27, 28, 29 நோற்கக்கூடிய நோன்புகளை நோற்று நபி (ஸல்) அவர்கள் ரமழானுக்குப் பின்னர் சிறந்த நோன்பு என்று சொல்லப்பட்ட சிறப்பை பெற முயல வேண்டும்.

ஆசூரா நோன்பு பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, இந்நாளை (ஆசூரா தினத்தை) தவிர வேறு எந்த நாளிலும் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் சிறப்பாக கருதி தேடியதாக நான் அறியவில்லை என உபைதுல்லா இப்னு அபி யஸீத் (ரழி) அவர்களிடம் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

முஹர்ரம் மாதத்தில் நபிகளார் செய்துவந்த, ஏவியவற்றில் ஆசூரா நோன்பு முக்கியமானதாகும். ஆசூரா என்பது பிறை கணிப்பீட்டின் படி முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும். முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் யூதர்களுக்கு மாற்றமாக தங்களது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகின்றது. யூதர்களும் ஆசூரா நோன்பை நோற்று வந்ததனால் அவர்களுக்கு மாற்றமாக ஒன்பதாவது நாளும் நோற்கவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘வருகின்ற வருடம் நான் இருந்தால் முஹர்ரம் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்’ என்றும் அன்னார் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

உபரியான வணக்கங்களுக்கு இஸ்லாம் சில சிறப்புக்களை வைத்திருப்பதை போன்று ஆசூரா நோன்பும் பல சிறப்புக்களை கொண்டிருப்பதாக நபி (ஸல்) அவர்கள் எடுத்தியம்பியுள்ளார்கள். இந்நாளில் நோன்பு நோற்பது முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையுமென்றும் அன்னார் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘ஆசூரா நோன்பு அதற்கு முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று நான் கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்பதன் பொருள் சிறுபாவங்களையே இது குறிக்கின்றது. மாறாக பெரும் பாவங்களை அல்ல. பெரும் பாவங்கள் செய்தவர்களின் குற்றங்களுக்கு பரிகாரமாக அமைவது தௌபாவாகும்.

ஆசூரா நோன்பை நபிகளார் நோற்று வந்தார்கள். அத்தோடு யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். இதனடிப்படையில் பத்தாவது நாளோடு ஒன்பதாவது நாளும் சேர்த்து நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இதற்கே அதிகமான ஆதாரங்களும் உள்ளன. முடியாவிட்டால் பத்து, பதினோராவது நாட்கள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாற்றமாக செயற்பட வேண்டும். இவ்விரு முறைகளிலும் ஒருவருக்கு நோன்பு நோற்க முடியாவிட்டால் பத்தாவது நாள் மாத்திரமாவது நோன்பு நோற்றுக்கொள்ள வேண்டும்.

அல்லாஹ் புனிதப்படுத்திய இம்மாதத்தின் புனிதத் தன்மையை பேணி, இம்மாதத்தில் அதிகமதிகம் நன்மைகளை செய்து, சுன்னத்தான நோன்பாகிய ஆசூரா நோன்பையும் நோற்று நபி(ஸல்) அவர்கள் கூறிய நற்கூலியை அடைய நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும்.

மௌலவி எம்.யூ,எம் வாலிஹ்
(அல் அஸ்ஹரி) வெலிகம

Post a Comment

0 Comments