சிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் சிரியா மீதான தடைகளை மேற்குலகம் நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தடைகள் முன்னயை அரசாங்கத்தை இலக்காக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் ஒடுக்குமுறையாளனையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே மாதிரி நடத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரண்டு வாரங்களிற்கு முன்னர் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்த்த தாக்குதல்களிற்கு அஹமட் அல் சரா தலைமை தாங்கியிருந்தார். ஹயட் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பின் தலைவரான இவர் முன்னர் அபு முகமட் அல் ஜொலானி என அழைக்கப்பட்டார்.
தனது அமைப்பினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் தனது அமைப்பு பயங்கரவாத அமைப்பில்லை என தெரிவித்துள்ளார்.
எச்டிஎஸ் அமைப்பினை ஐநா அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாங்கள் பொதுமக்களின் இலக்குகளை தாக்கவில்லை பொதுமக்களை தாக்கவில்லை மாறாக நாங்கள் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகளிற்கு பலியானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தான் சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற முயல்வதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிரியாவின் பிரதான கிளர்ச்சிக்குழுவின் தலைவர் எங்கள் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் வித்தியாசங்கள் உள்ளன பாரம்பரியங்கள் வித்தியாசமானவை ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகம் சிரியா வேறுவிதமான மனோநிலையை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் கல்விகற்கவேண்டும் என நான் நம்புகின்றேன் இட்லிப் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டவேளை அங்கு பல்கலைகழகங்கள் இயங்கின அங்கு கல்வி கற்றவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments