Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ரமழான் நோன்பின் மாண்பு...!



இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் நோன்பு தனித்துவமான ஒரு கடமையாகும். இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடக்கும் மனிதர்களை உருவாக்குவதற்கான ஒரு பயிற்சிப் பாசறையாக இது மிளிர்கிறது.

நோன்பு தட்டிக்கழிக்க முடியாத ஒரு கட்டாயக் கடமை. நியாயமான காரணமின்றி ஒருவர் ரமழானை விட்டுவிடுவது பெரும் பாவம் என்ற கருத்தை இமாம்கள் கொண்டுள்ளனர். நோன்பு கடமை என்ற கருத்தை அல்குர்ஆன் பின்வருமாறு வலியுறுத்துகின்றது. “ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.” 
 (அல்பகரா:183)

ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமை) களைப் பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை) வேறு நாட்களில் நோற்க வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானோ தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே(அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)” 
(அல் பகறா:185)

நோன்பு பல்வேறு வழிகளில் சிறப்புப் பெறுகிறது என்பதனை பின்வரும் நபி மொழிகள் தெளிவுபடுத்துகின்றன.

“நோன்பும் அல்குர்ஆனும் அடியானுக்காக மறுமையில் மன்றாடும். என் இரட்சகனே! பகலில் இவனை உணவை விட்டும் ஆசைகளை விட்டும் தடுத்தேன். இவனது விடயத்தில் எனது பரிந்துரையை ஏற்றுக் கொள்!” என நோன்பு கூறும். இரவில் இவனைத் தூக்கத்தை விட்டும் தடுத்தேன். இவனது விடயத்தில் எனது பரிந்துரை ஏற்றுக்கொள்!” என அல்குர்ஆன் கூறும். அவ்விரண்டினதும் பரிந்துரைகள் ஏற்கப்படும்.
(ஆதாரம்: அஹ்மத்)

“யார் ரமழானில் ஈமானுடனும் அல்லாஹ்விடத்தில் கூலியை எதிர் பார்த்த நிலையிலும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்”
(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

“மனிதனின் செயல்கள் அனைத்துக்கும் பன்மடங்கு கூலி வழங்கப்படும். ஒரு நன்மைக்குப் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி வழங்கப்படும். நோன்பைத் தவிர. அது எனக்குரியது. அதற்குரிய கூலியை நானே வழங்குகிறேன். அவன் தனது ஆசையையும், உணவையும் எனக்காக விட்டு விடுகிறான்” என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.”
(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

“நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் போது அடையும் சந்தோஷம், மற்றையது தன் இரட்சகனைச் சந்திக்கும் போது அடையும் சந்தோஷம்” 
 (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

“சுவனத்தில் ரய்யான் என அழைக்கப்படும் ஒரு வாயில் உண்டு. மறுமையில் நோன்பாளிகள் அவ்வாயிலின் ஊடாக சுவனம் நுழைவர். அவர்களைத் தவிர வேறுயாராலும் அவ்வாயிலினால் சுவனம் நுழைய முடியாது. நோன்பாளிகள் எங்கே? என அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் எழுந்து சுவனத்தில் நுழைவர். அவர்கள் நுழைந்தவுடன் அவ் வாயில் மூடப்பட்டுவிடும். அவ் வாயிலினால் வேறு எவரும் உட்புக முடியாது.”
(ஆதாரம்: புஹாரி,முஸ்லிம்)

மேலும் நோன்பின் மூலம் ஆன்மீக விருத்தி, அருட்கொடைகளை உணர்தல், ஏழைகளின் துயரத்தை விளங்குதல், உடல் ஆரோக்கியம் கிட்டுதல்,இறைவனுக்கு முழுமையாக அடிபணியப் பயிற்சி பெறல் என்பவற்றை அடைந்து கொள்ள முடியும்.

இச் சூழலை நன்கு பயன்படுத்துவோர் இம்மாதத்தில் அதிகமாக அல் குர்ஆன் ஓதுவர். திக்ர் செய்வர். இரவில் நின்று வணங்குவர். கொடை கொடுக்கின்றனர். உறவினர்களைக் கவனிக்கின்றனர். தௌபாவில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். இவ்வாறு நன்மைகள் எனும் நல்ல மலர்கள் அனைத்தும் இம்மாதத்தில் பூத்துக் குலுங்குகின்றன. எனவே ஒரு முஸ்லிம் இக்காலப்பகுதியில் ஆன்மீக ரீதியில் மிகவும் உயர்ந்து நிற்கிறான். பிரார்த்தனைகள் இறைவனால் ஏற்கப்படும் அளவுக்கு அவன் தன்னை வளர்த்துக் கொள்கிறான். “பொறுமையின் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோற்பதும் உள்ளத்தில் உள்ள அக்கினியை அழித்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: இப்னு மாஜா)

மேலும் சமூகத்தில் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவருக்குமே நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. எனவே, அனுபவத்தின் மூலம் பசியின் கொடுமையை செல்வந்தர்கள் புரிந்து கொள்கின்றனர். வறுமையின் கோரப்பிடியிலிருந்து சமூகத்தை பாதுகாக்கத் தம்மாலானதைச் செய்ய முன்வருகின்றனர்.

யூசுப் (அலை) அவர்கள் எகிப்தின் நிதியமைச்சராக இருந்த காலத்தில் அதிகமாக நோன்பு நோற்றார்கள். இது பற்றி அவரிடம் வினவப்பட்ட போது, “நான் வயிறார உண்டால் ஏழைகளின் பட்டினியை மறந்து விடுவேன் என அஞ்சுகிறேன்’ எனப் பதிலளித்தார்கள். குணப்படுத்த முடியாத சில நோய்களைக் குணப்படுத்த நோன்பு பெரிதும் உதவுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது. ‘நீங்கள் நோன்பு பிடியுங்கள் ஆரோக்கியம் பெறுவீர்கள்.’
(ஹதீஸ்)

வாழ்க்கையின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இறை கட்டளைகளைச் சிரமேற்கொண்டு தொழிற்படுவது ஒரு முஸ்லிமின் சிறப்புப் பண்பாகும். இப்பண்பை வளர்க்க ஒரு நீண்ட களப்பயிற்சியை நோன்பு வழங்குகிறது.

எமது முன்னோர்கள் நோன்பு காலத்தைச் சுவனப்பாதையில் முன்னேறிச் செல்வதற்குத் தமக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பமாகக் கருதிப் பயன்படுத்தினர். நோன்பு அவர்களை மாற்றியது. அது அவர்களுக்கு இறையச்சத்தை வழங்கியது. உடற்பலத்தை அளித்தது. உன்னத பண்புகளை கொடுத்தது. அவர்களைப் போன்று நாமும் ரமழானைப் பயன்படுத்துவோம்.

மௌலவி எம்.யூ.எம். வாலிஹ்…
(அல் அஸ்ஹரி, பாரி) வெலிகம

Post a Comment

0 Comments